இலங்கையில் அவசர நிலை முடிவுக்கு வந்தது


இலங்கையில் அவசர நிலை முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 23 Aug 2019 5:15 PM GMT (Updated: 23 Aug 2019 8:15 PM GMT)

இலங்கையில் 4 மாதங்களாக அமலில் இருந்த அவசர நிலை முடிவுக்கு வந்தது.

கொழும்பு,

இலங்கையில், கடந்த ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அதில், 258 பேர் பலியானார்கள்.

இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பினர் இந்த நாசவேலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை வேட்டையாடும் நோக்கத்திலும், அமைதியை கொண்டு வருவதற்காகவும் அவசர நிலையை அதிபர் சிறிசேனா பிறப்பித்தார். சந்தேகத்துக்குரிய எவரையும் நீண்ட காலத்துக்கு காவலில் வைக்க போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் அல்லது கொல்லப்பட்டு விட்டனர் என்று இலங்கை அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இலங்கையில் 4 மாதங்களாக அமலில் இருந்த அவசர நிலை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அவசர நிலையை ஒவ்வொரு மாதமும் 22-ந் தேதி அதிபர் சிறிசேனா நீட்டிப்பது வழக்கம்.

ஆனால், கடந்த 22-ந் தேதி, அவர் அவசர நிலையை நீட்டிக்கும் பிரகடனத்தை வெளியிடவில்லை. இதை அவரது அலுவலகமும் உறுதி செய்தது.

இலங்கை அரசு அச்சகமும் உறுதி செய்தது. அவசர நிலை நீட்டிக்கப்படாதநிலையில், அது முடிந்து விட்டதாகவே அர்த்தம். எனவே, அவசர நிலை முடிவுக்கு வந்து விட்டது என்று இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசர நிலை அமலில் இருந்ததால், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. எனவே, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, அவசர நிலையை தளர்த்த வேண்டும் என்று இலங்கை சுற்றுலா மந்திரி ஜான் அமரதுங்கா சமீபத்தில் கேட்டுக்கொண்டார். இந்தநிலையில், அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளது.

Next Story