இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’மசோதா நிறைவேற்றம்


இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’மசோதா நிறைவேற்றம்
x
தினத்தந்தி 20 Dec 2019 5:57 PM GMT (Updated: 20 Dec 2019 6:08 PM GMT)

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

லண்டன்,

650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். கன்சர்வேட்டிவ் கட்சி 337 இடங்களில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது . இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது அரசாங்கம் பிரெக்ஸிட்டைச் செய்வதற்கான சக்திவாய்ந்த புதிய உத்தரவை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போரிஸ் ஜான்சன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான 'பிரெக்ஸிட்' மசோதாவை, சில திருத்தங்களுடன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

'ஹவுஸ் ஆப் காமன்ஸ்' எனப்படும் கீழ்சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவை ஆதரித்து 358 ஓட்டுக்களும், எதிராக 234 ஓட்டுக்களும் விழுந்தன.

இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா 2020ம் ஆண்டு ஜனவரியில், மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இதைத் தொடர்ந்து, 2020 ஜனவரி 31ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, இங்கிலாந்து முறைப்படி வெளியேறும் என தகவல் வெளியாகி உள்ளது.

Next Story