ரஷியாவில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு


ரஷியாவில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Dec 2019 10:00 PM GMT (Updated: 25 Dec 2019 10:00 PM GMT)

ரஷியாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

மாஸ்கோ,

ரஷியா தலைநகர் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் நகரங்களில் கடந்த சில வாரங்களாக ரெயில் நிலையங்கள், கோர்ட்டுகள் மற்றும் பள்ளிக்கூடங்களை குறிவைத்து தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு மாஸ்கோ மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றும் பணிகள் தொடங்கியது. மொத்தம் 57 கட்டிடங்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின்னர் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த 57 கட்டிடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.

அதன்பிறகே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தியே என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story