அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானது: உக்ரைன் பிரதமர் ராஜினாமா


அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானது: உக்ரைன் பிரதமர் ராஜினாமா
x
தினத்தந்தி 17 Jan 2020 11:20 PM GMT (Updated: 17 Jan 2020 11:20 PM GMT)

அதிபரை விமர்சிக்கும் ஆடியோ வெளியானதை தொடர்ந்து உக்ரைன் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கீவ்,

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபராக நகைச்சுவை நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை அந்த நாட்டின் பிரதமர் ஒலெக்சி ஹான்சருக் விமர்சித்து பேசிய ஆடியோ வெளியானது. கடந்த மாதம் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் பொருளாதாரம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது “அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது” என்று பிரதமர் ஒலெக்சி பேசியது போல ஆடியோ உரையாடல் உள்ளது. இந்த ஆடியோ தற்போது வெளியானதை தொடர்ந்துதான் அவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஒலெக்சி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிபர் மீதான மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகத்தை நீக்க, ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் வழங்கி இருக்கிறேன். வெளியான ஆடியோ செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதில் உண்மை இல்லை. நான் அவ்வாறு பேசவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளதாகவும், அதுகுறித்து பரிசீலனையில் இருப்பதாகவும் அதிபர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story