அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் பதவி நீக்க தீர்மான விசாரணை தொடங்கியது: காரசார விவாதம்


அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் பதவி நீக்க தீர்மான விசாரணை தொடங்கியது: காரசார விவாதம்
x
தினத்தந்தி 23 Jan 2020 12:06 AM GMT (Updated: 23 Jan 2020 12:06 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் மீதான விசாரணை, அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் தொடங்கியது. இதையொட்டி காரசார விவாதம் நடந்தது.

வாஷிங்டன்,  

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் களம் காணுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜோ பிடெனின் மகன் ஹண்டர், உக்ரைன் நாட்டில் தொழில் செய்கிறார். இதையொட்டி உக்ரைன் அதிபர் வலாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் அழுத்தம் தந்தார், அதாவது ஜோ பிடென், ஹண்டர் ஆகியோர் மீது விசாரணை நடத்த வேண்டும், அப்படி நடத்தாவிட்டால் ராணுவ பாதுகாப்பு நிதி வழங்குவதை நிறுத்தி விடுவோம் என்று மிரட்டினார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்படி விசாரணை நடத்துவதின் மூலம் ஜனாதிபதி தேர்தல் களத்தில் ஜோ பிடெனை பலவீனப்படுத்தி விடலாம் என டிரம்ப் கணக்கு போட்டார் என்றும் கூறப்படுகிறது.

இது அவர் அந்த நாட்டின் அரசியல் சாசனப்படி பதவி ஏற்றதை மீறும் செயல் என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சாடுகிறது.

இந்த விவகாரத்தில் டிரம்பை பதவியை விட்டு நீக்குவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சி கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது.

இப்போது அந்த தீர்மானம், செனட் சபையில் உள்ளது. இங்கு தீர்மானம் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேறினால் மட்டுமே டிரம்ப் பதவியை பறிக்க முடியும்.

இந்த நிலையில் செனட் சபையில் விசாரணை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விசாரணையின்போது குடியரசு கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். விவாதத்தில் அனல் வீசியது.

இந்த விசாரணையின்போது முக்கிய சாட்சிகளுக்கு சம்மன் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று செனட் சபையில் குடியரசு கட்சியின் தலைவராக உள்ள மிட்ச் மெக்கன்னல் கருதுகிறார்.

100 உறுப்பினர்களை கொண்ட சென்ட் சபையில் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ள நிலையில், தனது விதிகளை மாற்றுவதற்கான எந்தவொரு ஜனநாயக முயற்சியையும் தடுப்பேன் என்று அவர் விசாரணை தொடக்கத்தின்போது குறிப்பிட்டார். மேலும், தாங்கள் முன்மொழிகிற அடிப்படை கட்டமைப்பு மிகவும் நியாயமானது எனவும் அவர் கூறினார்.

ஆனால் அதை டிரம்ப் மீதான ஜனநாயக கட்சியின் குற்ற தீர்மான நிர்வாகிகள் குழுவின் தலைவரான ஆடம் ஸ்சிப் மறுத்து வாதிட்டார். மிட்ச் மெக்கன்னலின் நிலைப்பாடு அர்த்தம் அற்றது என அவர் சாடினார். விசாரணை மூடி மறைக்கப்பட்டதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து விவாதம் நடைபெறுகிறது.

இதற்கிடையே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்த குற்ற தீர்மான விசாரணையில் டிரம்ப் வெற்றியாளராக வெளி வருவார்” என கூறினர். செனட் சபையில் அவரது குடியரசு கட்சி பெரும்பான்மை கட்சியாக உள்ளதே இதற்கு காரணம் ஆகும்.

இந்த விசாரணை தொடர்பாக ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், “ஜனநாயக கட்சியினர் தமாஷ்பேர்வழிகள். அவர்களிடம் வழக்குக்கு எந்த ஆதாரமும் கிடையாது” என கூறியது.


Next Story