சீனாவை தொடர்ந்து தென்கொரியாவை மிரட்டும் கொரோனா வைரஸ்


சீனாவை தொடர்ந்து தென்கொரியாவை மிரட்டும் கொரோனா வைரஸ்
x
தினத்தந்தி 21 Feb 2020 9:42 PM GMT (Updated: 21 Feb 2020 9:42 PM GMT)

சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. அங்கு ஒரே நாளில் 100 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

சியோல்,

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் அந்த நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் அசுர வேகத்தில் பரவியது.

இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் தினந்தோறும் உயிர்பலிகளை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதால் பலி எண்ணிகை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 118 பேர் கொரோனா வைரசால் பலியாகினர். அதிலும் கொரோனாவின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஹூபெய் மாகாணத்தில் மட்டும் 115 பேர் உயிரிழந்தனர். இதில் உகான் நகரை சேர்ந்த ஒரு டாக்டரும் அடங்குவார்.

அந்த நகரின் ஜியாங்ஷியா மாவட்டத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த டாக்டர் பெங் யின்குவா (வயது 29).

இவர் கொரோனாவிடம் இருந்து நோயாளிகளை காப்பாற்றுவதற்காக, தனக்கு நடக்க இருந்த திருமணத்தை ஒத்திவைத்துவிட்டு, இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்தார்.

இந்த சூழலில் கடந்த மாதம் 25-ந்தேதி பெங் யின்குவாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர் உகானில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் சீனாவில் கொரோனா தாக்கு தலுக்கு பலியான மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 232 ஆக அதிகரித்து இருக்கிறது.

அதே சமயம் சீனாவில் கொரோனா வைரசின் வீரியம் முன்பை விட குறைய தொடங்கி இருக்கிறது.

அதாவது, புதிதாக வைரஸ் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வந்த நிலையில், தற்போது அது குறைய தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 889 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

அதே போல் நோய் தாக்கம் தொடங்கியது முதல் நேற்று முன்தினம் வரை 18 ஆயிரத்து 264 பேர் நோயில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

நோய் தாக்கம் கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 75 ஆயிரத்து 465 பேருக்கு தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சீனாவை தொடர்ந்து, தென்கொரியாவை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது. சீனாவில் இருந்து 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியிருந்தாலும் தென்கொரியாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அந்த நாட்டின் கியோங்சாங் மாகாணத்தின் தலைநகர் தேகுவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதன் காரணமாக அங்கு கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அந்த நாட்டில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஜப்பானை தொடர்ந்து, சீனாவுக்கு வெளியே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தென்கொரியா மாறியுள்ளது.

வைரஸ் பரவலை தடுக்க அந்த நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள தேகு மற்றும் சியோங்டோ நகரங்கள் சிறப்பு பராமரிப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

அந்த நகரங்களில் மக்கள் பொது இடங்களில் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story