கொரோனா வைரஸ் விவகாரத்தில் மோதல்; உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க நிதி நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை


கொரோனா வைரஸ் விவகாரத்தில் மோதல்; உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க நிதி நிறுத்தம் - டிரம்ப் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 16 April 2020 12:06 AM GMT (Updated: 16 April 2020 12:06 AM GMT)

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்துமாறு அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

வாஷிங்டன், 

‘ஹூ’ அல்லது ‘டபிள்யு.எச்.ஓ’ என்று அழைக்கப்படுகிற உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. இந்தியா உள்பட 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் இந்த நிறுவனம், செயல்படுவதற்கான முக்கிய நிதி பங்களிப்பை அமெரிக்காதான் வழங்கி வருகிறது. 

இந்த நிலையில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி, பெருத்த உயிர்ச்சேதங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரஸ், 1 லட்சத்து 19 ஆயிரம் பேரை பலிகொண்டுள்ளது. இந்த வைரசால், உலகின் வேறு எந்த நாடுகளையும்விட, அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குதான் அதிகளவிலான மக்கள் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி உள்ளனர். இதே போன்று இறப்பிலும் அதிக இறப்பு, அமெரிக்காவில்தான் நேர்ந்துள்ளது. அமெரிக்காவில் 6 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தாக்கி உள்ளது. தவிரவும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றியபோதும், இதில் அந்த நாடு வெளிப்படையாக நடக்கவில்லை, உண்மைகளை மறைத்து விட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. இதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்துப்போய் விட்டது என்றும் அமெரிக்கா கருதுகிறது.

ஆனால், கொரோனா வைரஸ் விவகாரத்தில், சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பக்க பலமாக இருந்து வருகிறது, சீனாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக உத்தரவிட்டார். இதையொட்டி அவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்துமாறு எனது நிர்வாகத்துக்கு இன்று அறிவுறுத்தி உள்ளேன். கொரோனா வைரஸ் பரவலை மூடி மறைத்து, தவறாக நிர்வகித்ததில் உலக சுகாதார நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பு ஆய்வு செய்யப்படுகிறது. அங்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

அமெரிக்காவில் வரி செலுத்துவோர் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்துக்கு 400 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரையில் (சுமார் ரூ.3,000 கோடியில் இருந்து ரூ.3,750 கோடி வரையில்) வழங்குகின்றனர்.

சீனாவோ ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் (சுமார் ரூ.300 கோடி) வழங்குகிறது. அதற்கும் குறைவாகக்கூட வழங்குகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு தேவைப்படுகிற நிதியில் முக்கிய பங்களிப்பு செய்கிற நாடு என்கிற முறையில், அதன் முழு பொறுப்பை வலியுறுத்த வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு உண்டு.

உலக சுகாதார நிறுவனத்தை நாடுகள் அனைத்தும் சார்ந்து இருக்கின்றன. உலக சுகாதார அமைப்பு அந்த நாடுகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும். கொரோனா வைரஸ் விவகாரத்தில், துல்லியமான தகவல்களை உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். சர்வதேச அச்சுறுத்தல் பற்றி சரியான நேரத்தில் தகவல்களை பகிர்ந்து இருக்க வேண்டும். இந்த அடிப்படை கடமையில் இருந்து உலக சுகாதார நிறுவனம் தவறி விட்டது.

உகானில் இருந்து வந்த தகவல்களும், சீன அரசிடம் இருந்து வந்த தகவல்களும் முரண்பட்டன. அவற்றின் நம்பகத்தன்மையை விசாரிக்க உலக சுகாதார நிறுவனம் தவறி விட்டது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான நம்பகமான தகவல்கள் டிசம்பரில் இருந்தன. இதையும் உலக சுகாதார நிறுவனம் விசாரித்து இருக்க வேண்டும்.

உலக சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார நிறுவனம் மிகவும் தாமதமாகவே அறிவித்தது. கொரோனா வைரஸ் மாதிரியை இன்று வரை உலக சுகாதார நிறுவனம் பெற இயலாமல்போனதால், அறிவியல் சமூகம் அது தொடர்பான அத்தியாவசியமான தரவுகளை பெற இயல வில்லை.

சீனாவில் நிலவி வந்த உண்மை கள நிலையை ஆராய்வதற்கும், சீனாவிடம் வெளிப்படைத்தன்மை இல்லாததை கூறுவதற்கும் மருத்துவ நிபுணர்களை அங்கு கொண்டு செல்வதற்கு உலக சுகாதார நிறுவனம் தனது கடமையை செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், மிகக் குறைவான உயிர்ப்பலியுடன் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும்.

ஆனால் அதற்கு பதிலாக முக மதிப்பிலேயே சீனாவின் உத்தரவாதங்களை உலக சுகாதார நிறுவனம் எடுத்துக் கொண்டது. சீன அரசின் நடவடிக்கைகளை பாதுகாத்தது. சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக பாராட்டவும் செய்தது. இந்த வைரஸ் தொடர்பான சீனாவின் தவறான தகவல்களை உலக சுகாதார நிறுவனம் முன் வைத்தது. இது தொற்றுநோய் அல்ல, இதற்காக பயண தடை விதிப்பது அவசியம் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியது.

சீனா சொன்னதையெல்லாம் உலக சுகாதார நிறுவனம், நம்பியதின் வெளிப்பாடுதான் இன்றைக்கு இந்த வைரஸ் உலக அளவில் 20 மடங்கு பெருகி இருக்கிறது. இதைவிட அதிகமாக கூட பாதிப்பு இருக்கலாம். உண்மையாக நடந்து கொண்டிருந்தால் அது உலக சுகாதார நிறுவனத்துக்கு எளிதாக இருந்து இருக்கலாம். அவர்களின் தவறுகளால்தான் இவ்வளவு மரணங்கள் நேரிட்டு இருக்கின்றன.

அர்த்தமுள்ள சீர்திருத்தங்களை உலக சுகாதார நிறுவனம் செய்யுமா? என்பதை அறிவதற்காக தொடர்ந்து அதனுடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார். உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Next Story