கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து: இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு


கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து: இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு
x
தினத்தந்தி 18 April 2020 10:44 PM GMT (Updated: 18 April 2020 10:44 PM GMT)

கொரோனா சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு மருந்து அனுப்பியதற்காக இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

நியூயார்க், 

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே, மலேரியா காய்ச்சலை குணப்படுத்த உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டது. இந்த மாத்திரைகள் இந்தியாவில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, இந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தங்களுக்கு வழங்குமாறு அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவை கேட்டுக்கொண்டன. இதனால் ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இருந்து வந்த தடையை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. இதைத்தொடர்ந்து, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன.

அமெரிக்கா, மொரீஷியஸ், செசல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்த மாத்திரைகள் போய்ச் சேர்ந்து விட்டன. மேலும் ஆப்கானிஸ்தான், பூடான், வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவு, இலங்கை, பிரான்ஸ், மியான்மர், ஜாம்பியா, உகாண்டா, எகிப்து, அர்மீனியா, கஜகஸ்தான், கென்யா, ஜோர்டான், ஜமைக்கா, டொமினிகன் குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவிடம் இருந்து இந்த மாத்திரைகளை பெறுகின்றன. சில நாடுகள் இந்த மாத்திரைகளை விலை கொடுத்து வாங்குகின்றன. சில நாடுகளுக்கு இந்தியா இலவசமாக வழங்குகிறது. அந்த வகையில் 55 நாடுகள் இந்தியாவிடம் இருந்து இந்த மாத்திரைகளை பெறுகின்றன.

மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா பெருந்தொற்று நோய் என்பதால் அதை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்றும், இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற உதவிகளை மற்ற நாடுகளுக்கு செய்ய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதை ஏற்கும் வகையில், பல நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், மற்ற உபகரணங்களையும் இந்தியா அனுப்பி வைத்து இருப்பதை அன்டோனியோ குட்டரஸ் வெகுவாக வரவேற்று, பாராட்டி இருக்கிறார். இதேபோல் கொரோனாவை ஒழிக்க மற்ற நாடுகளுக்கு உதவும் நாடுகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்த தகவலை அவரது செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

2 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை நன்கொடையாக வழங்கியதற்காக டொமினிகன் குடியரசு இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story