கிம் ஜாங் அன் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து


கிம் ஜாங் அன் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து
x
தினத்தந்தி 23 April 2020 12:29 AM GMT (Updated: 23 April 2020 12:29 AM GMT)

கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அவர் விரைவில் குணமடைய டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், இதய நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், இதனால் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள தென்கொரியா, ‘வடகொரியாவில் அசாதாரண சூழ்நிலைகள் எதுவும் தென்படவில்லை’ என விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம், வடகொரியா தலைவரின் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் பதிலளித்து பேசியதாவது:-

எனக்கும் வடகொரிய தலைவர் கிம்முக்கும் நல்ல நட்பு இருக்கிறது. நானும், கிம்மும் ஒருபோதும் போர் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இல்லை. எங்களில் ஒருவர் அந்த மனநிலையில் இருந்திருந்தால்கூட அது நடந்திருக்கும். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியபின் நெருங்கிவிட்டோம்.

கிம், உண்மையிலேயே ஆபத்தான நிலையில் இருந்தால் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிப்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால் அந்த செய்தியின் உண்மை நிலவரம் பற்றி எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story