கொரோனா விவகாரத்தில் மோதல்: உலக சுகாதார நிறுவன உறவை அமெரிக்கா துண்டித்தது


கொரோனா விவகாரத்தில் மோதல்: உலக சுகாதார நிறுவன உறவை அமெரிக்கா துண்டித்தது
x
தினத்தந்தி 30 May 2020 11:30 PM GMT (Updated: 30 May 2020 7:56 PM GMT)

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்ட நிலையில், அதனுடனான உறவை துண்டித்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வாஷிங்டன், 

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் வெளிப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் தொற்று பற்றிய தகவல்களை சீனா வெளியிடாமல் மூடி மறைத்து விட்டது என்பது அமெரிக்காவின் உறுதியான குற்றச்சாட்டு.

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் உண்மைகளை மூடி மறைப்பதில் சீனாவுக்கு, உலக சுகாதார நிறுவனம் பக்க பலமாக இருந்து வருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் மீதும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அந்த நிறுவனத்துக்கான நிதியை நிறுத்தியும் வைத்தது.

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று நோய் என்பதை அது தோன்றி ஏறத்தாழ 100 நாட்களுக்கு பிறகுதான் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதற்குள் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி விட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

இதனால் அமெரிக்காவுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் இடையேயும் மோதல் போக்கு உருவானது.

அந்த வகையில், கடந்த 18-ந் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோமுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காட்டமான கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக செயல்படுவதை உலக சுகாதார நிறுவனம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கூறி ஒரு மாத கெடுவும் விதித்திருந்தார். கொரோனா தொற்றுக்கு பதில் அளிப்பதில் டெட்ரோசும், அவரது நிறுவனமும் மீண்டும் மீண்டும் தவறாக நடந்து கொண்டதற்கு உலகம் கடும் விலையை கொடுக்க நேர்ந்துள்ளதாக குற்றம் சாட்டியும் இருந்தார். உலக சுகாதார நிறுவனத்தின் போக்கு மாறாவிட்டால், அதனுடனான உறவை துண்டிக்க நேரிடும் என்றும் டிரம்ப் எச்சரித்து இருந்தார். உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது எனவும் அவர் தொடர்ந்து கடுமையாக சாடினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில் உலக சுகாதார நிறுவத்துடனான உறவை துண்டிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் இன்று (நேற்று முன்தினம்) உலக சுகாதார நிறுவனத்துடனான எங்கள் உறவை துண்டித்துக்கொள்கிறோம். அந்த நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை மற்ற உலகளாவிய பொது சுகாதார தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்புவோம்.

சீன அரசு செய்த தவறுகளின் விளைவாக உலகம் இப்போது பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

சீனாதான் இந்த உலகளாவிய தொற்றுநோயைத் தூண்டி விட்டது. அதற்கு விலையாக அமெரிக்கா 1 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை பலி கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகத்தை தவறாக வழிநடத்துவதற்கு உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா அழுத்தும் கொடுக்கிறது என்று டிரம்ப் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் இயங்குவதற்கு அமெரிக்காதான் முக்கிய நிதி அளிக்கும் நாடாக விளங்கி வந்தது, கடந்து ஆண்டு உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,000 கோடி) நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story