சர்ச்சைக்குரிய சட்ட மசோதா: ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படலாம்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை


சர்ச்சைக்குரிய சட்ட மசோதா: ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படலாம்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2021 4:51 PM GMT (Updated: 22 Jan 2021 4:51 PM GMT)

சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படலாம் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தங்களது தளங்களில் உள்நாட்டு செய்தி நிறுவனங்களின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்கு, சம்மந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு, உரிய பணம் வழங்க வேண்டும், தவறினால் மில்லியன் டாலர் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவை சட்டமாக்குவதற்கு கூகுள் நிறுவனம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறி சேவை நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் கூகுள் நிர்வாக இயக்குனர் மெல் சில்வா கூறுகையில், “ஊடகங்களுக்கு பணம் வழங்க கூறும் இந்த மசோதா சட்டமாக மாறினால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறியின் சேவையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இது எங்களுக்கு மட்டுமல்ல ஆஸ்திரேலிய மக்களுக்கும், ஊடக பன்முகத்தன்மை மற்றும் ஒவ்வொரு நாளும் எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தும் சிறு வணிகர்களுக்கும் ஒரு மோசமான விளைவாக இருக்கும்” என கூறினார்.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறுகையில், “நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு பதில் அளிப்பதில்லை. ஆஸ்திரேலியாவில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களுக்கு நாங்கள் விதிகளை உருவாக்குகிறோம். இது எங்கள் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படுகிறது” என்றார்.


Next Story