அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை உடைப்பு; இந்தியா கடும் கண்டனம்


அமெரிக்காவில் காந்தி சிலை கணுக்கால் துண்டிக்கப்பட்டு, முகமும் சேதப்படுத்தப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
x
அமெரிக்காவில் காந்தி சிலை கணுக்கால் துண்டிக்கப்பட்டு, முகமும் சேதப்படுத்தப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 30 Jan 2021 5:41 PM GMT (Updated: 30 Jan 2021 5:41 PM GMT)

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொடிய சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காந்தி சிலை உடைப்பு
தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவுதினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்ட தருணத்தில், அமெரிக்காவில் அவரது சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி, இந்தியர்கள் ஒவ்வொருவர் இதயத்திலும் ரத்தம் கசிய வைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த சிலை, டேவிஸ் நகருக்கு இந்திய அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். இந்த சிலையை, நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தி எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கு வைத்தது. இந்த சிலையை விஷமிகள் தாக்கி, அதன் கணுக்கால் பகுதி வெட்டப்பட்டு, சிலையின் முகத்தில் பாதி துண்டிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளது.

இதை கடந்த 27-ந்தேதி பூங்காவின் ஊழியர்தான் முதலில் கண்டுபிடித்தார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் வைக்கப்படும் என்று டேவிஸ் நகராட்சி கவுன்சிலர் லூகாஸ் பிரீரிச்ஸ் தெரிவித்தார்.

போலீஸ் தீவிரம்
இந்த சிலை எப்போது சேதப்படுத்தப்பட்டது, அதன் நோக்கம்தான் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இதுபற்றி டேவிஸ் நகர போலீஸ் துணைத்தலைவர் பால் டோரோஷோவ் கூறுகையில், “டேவிசில் உள்ள ஒரு பகுதியினருக்கு இந்த சிலை கலாசார சின்னமாக இருந்து வந்தது. எனவே இதை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்” என குறிப்பிட்டார்.

இந்த சிலையை அங்கு வைப்பதற்கு ஓ.எப்.எம்.ஐ. என்று அழைக்கப்படுகிற இந்திய சிறுபான்மையினருக்கான அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும் இந்த சிலையை அங்கு வைக்க நகரசபை தீர்மானித்தது. அதில் இருந்து இந்த சிலையை அகற்றுவதற்கு அந்த அமைப்பு போராட்டங்கள் நடத்தியது.

இந்தியர்கள் வேதனை
இந்த சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் மட்டுமல்லாது, உலகமெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் ஆழ்ந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி இந்திய சர்வதேச நண்பர்கள் அமைப்பின் குராங் தேசாய் கருத்து தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக இந்திய எதிர்ப்பு மற்றும் இந்துவிரோத அடிப்படைவாத அமைப்பான இந்திய சிறுபான்மையினருக்கான அமைப்பினராலும், காலிஸ்தான் பிரிவினைவாதிகளாலும் வெறுப்பின சூழல் உருவாக்கப்பட்டு வந்தது. அவர்கள் இந்திய கலாசார சின்னங்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரங்களை நடத்துவதோடு மட்டுமின்றி, இந்துஎதிர்ப்பு உணர்வினை ஏற்படுத்தும் முயற்சியிலும், கலிபோர்னியா பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து இந்தியாவை நீக்கும் முயற்சியிலும் பின்னணியில் இருந்து வந்தனர்” என கூறினார்.

காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தை வெறுப்புணர்வு குற்றமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்துமாறு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புக்கு (எப்.பி.ஐ.) இந்து அமெரிக்க அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காந்தி சிலை உடைப்பு சம்பவத்தை கலிபோர்னியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவு குழு வரவேற்றுள்ளது.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு டிசம்பரில், வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சேதப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

இந்தியா கண்டனம்
இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையொட்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய சின்னத்துக்கு எதிரான இந்த தீங்கிழைக்கும், இழிவான செயலை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்க வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

Next Story