ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மோதல் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா வலியுறுத்தல்


ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மோதல் - பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா வலியுறுத்தல்
x

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத செயல்கள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாத தாக்குதலை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானின் பாக்டிகா, கோஸ்ட் ஆகிய பயங்கரவாத தளங்களில் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் விவகாரத்திற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை ஊடக பொதுச்செயலாளர் கரின் ஜீன் பியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"பாகிஸ்தானில் உள்ள ராணுவ சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தலிபான்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதே சமயம் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இரு தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அமெரிக்கா அல்லது பிற நட்பு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் இனி ஒருபோதும் பாதுகாப்பான புகலிடமாக இருக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story