ஐரோப்பா, ஈரானை அடுத்து ரஷியாவுக்கு குறி...!! ஐ.எஸ். பற்றி முன்பே எச்சரித்த அமெரிக்கா


ஐரோப்பா, ஈரானை அடுத்து ரஷியாவுக்கு குறி...!! ஐ.எஸ். பற்றி முன்பே எச்சரித்த அமெரிக்கா
x
தினத்தந்தி 23 March 2024 6:42 AM GMT (Updated: 23 March 2024 8:06 AM GMT)

ரஷியா மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட கூடும் என அந்நாட்டு அதிகாரிகளிடம், அமெரிக்க அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் உளவு தகவலை தெரிவித்து இருந்தனர்.

நியூயார்க்,

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில், அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

இதனால், உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால், மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர். 5 குழந்தைகள் உள்பட 115 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

60 பேர் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து, 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேற்கூரையின் இடிபாடுகளில் சிக்கிய நபர்களில் இருந்து பலரும் மீட்பு குழுவினரால் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்றும் முதலில், கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

இந்த தாக்குதல் பற்றிய வீடியோ ஒன்றும் வெளியானது. அதில், சிலர் துப்பாக்கிகளால் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி சுடுவதும், மக்கள் அலறியடித்தபடி ஓடுவதும், இருக்கைகளுக்கு பின்னே ஓடி ஒளிந்து கொள்ளும் காட்சிகளும் காணப்படுகின்றன. துப்பாக்கி சூடு சத்தம் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது.

இதனுடன், அவர்கள் கூட்டத்தினர் மீது வெடிகுண்டுகளையும் வீசியுள்ளனர். இதன்பின்பு அவர்கள் அரங்கில் இருந்து வெளியேறி, வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றில் தப்பி சென்றனர்.

நாங்கள் தாக்குதலை நடத்தினோம் என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அமக் என்ற செய்தி நிறுவனம், டெலிகிராம் சமூக ஊடக பக்கத்தில் இதனை வெளியிட்டது. எனினும், இதற்கான சான்றுகள் எதனையும் வழங்கவில்லை.

இந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் பற்றிய தகவலை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுபற்றி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், ரஷியா மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட கூடும் என அந்நாட்டு அதிகாரிகளிடம், அமெரிக்க அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் உளவு தகவலை தெரிவித்து உள்ளனர்.

இதற்காக சேகரித்த தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஐ.எஸ்.-கோரசன் எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது ரஷியாவை தாக்க திட்டமிட்டு உள்ளது. அதன் உறுப்பினர்கள் ரஷியாவில் தீவிர செயல்பாட்டுடன் உள்ளனர் என்றும் எச்சரித்தது.

இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த பயங்கரவாத ஒழிப்புக்கான பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் ஆய்வாளரான, காலின் கிளார்க் கூறும்போது, 2 ஆண்டுகளாகவே, ரஷியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு வேரூன்றி விட்டது. தொடர்ந்து புதினை விமர்சித்தும் வந்தது. ஆப்கானிஸ்தான், செச்சன்யா மற்றும் சிரியாவில் ரஷியாவின் தலையிடுதலையும் குறிப்பிட்டு வந்தது என கூறியுள்ளார்.

கடந்த 7-ந்தேதி தாக்குதல் பற்றி அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாகவே எச்சரித்து இருந்தனர். அதனுடன், ரஷியா மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட கூடும் என அந்நாட்டு அதிகாரிகளிடம், அமெரிக்க அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் உளவு தகவலை தெரிவித்து இருந்தனர்.

எனினும், எவ்வளவு தகவல்களை அமெரிக்கா அளித்தது போன்ற விவரங்கள் வெளிவரவில்லை. ஐரோப்பாவில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. எனினும், இதுபோன்ற பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்பே முறியடிக்கப்பட்டன. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் செயல்திறன்களும் முற்றிலும் மறைந்து விட்டன.

ஈரானில் கடந்த ஜனவரியில், இரட்டை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலில், 103 பேர் உயிரிழந்தனர். 211 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் பற்றியும் அமெரிக்கா முன்பே எச்சரித்து இருந்தது.

ரஷியாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். 5-வது முறையாக வெற்றி பெற்ற அவர், தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பார். இதனால், உக்ரைனுக்கு எதிராக 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story