பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை கொலை செய்யும் இந்திய உளவு அமைப்பு- பரபரப்பை கிளப்பிய இங்கிலாந்து நாளிதழ் செய்தி


பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை கொலை செய்யும்  இந்திய உளவு அமைப்பு-  பரபரப்பை கிளப்பிய இங்கிலாந்து நாளிதழ் செய்தி
x

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை, இந்திய உளவாளிகள் குறிவைத்து கொல்வதாக ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன்,

பாகிஸ்தானில் பதுங்கியபடி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளை, இந்திய உளவாளிகள் குறிவைத்து கொன்று வருவதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பிரதமர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' உளவாளிகள் இதற்கான ரகசிய செயல்பாடுகளை ஒருங்கிணைத்து அரங்கேற்றுவதாகவும் கார்டியன் கூறியிருந்தது.

2020-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதிகள் படுகொலைகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து செயல்படும் 'ரா' கிளை, பாகிஸ்தானின் இந்திய ஸ்லீப்பர் செல்கள், மற்றும் உள்ளூர் குற்றவாளிகளை பணிக்கு அமர்த்தி இந்த வேட்டையாடலை சாத்தியமாக்கி உள்ளதாகவும், 2019 புல்வாமா தாக்குதலை அடுத்து பிரதமர் அலுவலகம் முன்னெடுத்த, தேசிய பாதுகாப்புக்கான உறுதியான அணுகுமுறையின் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் படுகொலைகளை அரங்கேற்ற இந்திய உளவாளிகளுக்கு அனுமதியும், ஆதரவும் அளிக்கப்பட்டதாகவும் கார்டியன் செய்தி விவரிக்கிறது.

வெளிநாட்டு மண்ணில் படுகொலை செய்தது மற்றும் படுகொலைக்கு முயன்றதாக இந்தியா மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல.. ஏற்கனவே, காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வைத்து கொல்லப்பட்டதில் இந்தியா மீது நம்பகமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய உளவு அமைப்பு முன்னெடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இந்த செய்திக்க்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனமும் மறுப்பும் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை, 'தவறான மற்றும் தீங்கிழைக்கும் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம்' என்று இந்தியா விமர்சித்துள்ளது. மேலும் 'பிற நாடுகளில் குறிவைக்கப்பட்ட கொலைகளை நடத்துவது இந்திய அரசின் கொள்கை அல்ல' எனவும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.


Next Story