சந்தனக்காப்பு ஏற்கும் மாசிலாமணீஸ்வரர்


சந்தனக்காப்பு ஏற்கும் மாசிலாமணீஸ்வரர்
x
தினத்தந்தி 9 May 2018 9:31 AM GMT (Updated: 9 May 2018 9:31 AM GMT)

சந்தனம் குளிர்ச்சியை உடையது; சுடர் சூடானது. குளிர்ச்சியுடைய சந்தனத்தை, அக்னி சொரூபமான சிவபெருமான் ஏற்று, ஒரு ஆண்டு முழுவதும் அந்த சந்தன மேனியுடன் காட்சி தரும் ஆலயம் ஒன்று உள்ளது.

கிருதயுகத்தில் ரத்தினபுரம், திரேதாயுகத்தில் வில்வவனம், துவாபரயுகத்தில் செண்பக வனம் அழைக்கப்பட்ட அந்தத் திருத்தலம், இந்தக் கலியுகத்தின் தொடக்கத்தில் முல்லை வனமாக இருந்துள்ளது. வடதிருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் ஆலயம் தான் அது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூருக்கு அருகில் இருக்கிறது வட திருமுல்லைவாயில். இத்தல இறைவன், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், மாசிலாமணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். நாயகியின் பெயர் லதாமத்யாம்பாள், கொடியிடை நாயகி என்பதாகும்.

தல வரலாறு

காஞ்சியிலிருந்து அரசாட்சி செய்து வந்தான், தொண்டைமான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். அதே வேளையில், புழல்கோட்டையில் இருந்து கொண்டு ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள், எருக்கத்தூண்களும், வெண்கலக்கதவும், பவழத் தூண்களும் கொண்டு பைரவ உபாசனையுடன் ஆட்சி செய்து வந்தனர்.

இவர்களைக் காண தொண்டைமான் வரும் வழியில் ‘கோழம்பேடு’ என்னும் கிராமத்தைக் கடக்கும்போது, அங்கிருந்த சிவன் கோவிலின் வெண்கல மணியோசை கேட்டது. மன்னன் ஒருவன் யானையில் வருவதைக் கண்ட அசுர குறுநில மன்னன் ஒருவன், தன் சேனைகளுடன் வந்து தொண்டைமானை எதிர்த்தான். தொண்டைமான், போர் செய்வதற்குச் சேனைகளை அழைத்து வரத்திரும்பினான். அப்போது, யானையின் கால்களில் முல்லைக்கொடிகள் சுற்றிக் கொண்டன. அந்த முல்லைக்கொடிகளை அகற்றி வழி உண்டாக்க நினைத்த மன்னன், யானையில் இருந்தபடியே தனது உடைவாளை உருவி புதரை வெட்டினான். அப்போது புதரிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது கண்டு மிரண்டான்.

செய்வதறியாது திகைத்த மன்னன், யானையில் இருந்து கீழே இறங்கிப் பார்த்தபோது, புதருக்குள் ஒரு லிங்கத் திருமேனி இருப்பதையும், அதில் இருந்து ரத்தம் வழிவதையும் கண்டான். தான் செய்த தவறை உணர்ந்த மன்னன், தன்னுடைய வாளால் தலையை அரிந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான்.

அப்போது இறைவன் காளை வானத்தின் மீது காட்சி தந்து, ‘மன்னனே! வெட்டுப்பட்டாலும் குற்றமில்லை. நான் மாசு இல்லா மணியே! கவலைப்படாதே, நந்தியை உனக்குத் துணையாக அனுப்புகிறேன். வென்று வருக’ என்று அருள் புரிந்தார்.

இந்த சுயம்பு மூர்த்தியானவர், ஆலயத்தின் கருவறையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். உயரமான லிங்கம். சதுரபீட ஆவுடையார். லிங்கத்தின் மேல்புறம் வெட்டுப்பட்ட வடு உள்ளது. வெட்டுப்பட்ட இடத்தில் எப்போதும் சந்தனம் சாத்தப்பட்டிருக்கும். ஆதலால் அபிஷேகங்கள் லிங்கப்பகுதிக்குக் கிடையாது. ஆவுடையாருக்குத் தான். சுவாமிக்கு வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் என்பதால், லிங்கத்தின் மீதிருக்கும் சந்தனம் களையப்படுவதில்லை. அந்த சந்தனத்தின் மீதே மீண்டும் சந்தனம் சாத்தப்படும்.

வருடத்திற்கு ஒருமுறை சித்திரை சதயத்தில் மட்டும் சந்தனக்காப்பு முழுமையாக களையப்பட்டு, அபிஷேகம் முடிந்து மீண்டும் சந்தனக்காப்பு செய்யப்படும். இந்த நாளில் மட்டுமே லிங்கத்திருமேனியின் சொரூபத்தை நாம் தரிசிக்க முடியும். மற்றபடி ஆண்டு முழுவதும் இறைவனின் மீது சந்தனக்காப்பு இருந்து கொண்டே இருக்கும்.

இறைவன் கட்டளைப்படி நந்தியம்பெருமான், தொண்டைமான் அரசனுடன் போருக்குப் போனதால், இத்தலத்தில் நந்தி கருவறைக்குப் பின்புறம் காட்டி அமர்ந்துள்ளார். தொண்டைமான், நந்தியுடன் வந்ததால் ஓணன், காந்தன் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து மன்னன் எடுத்து வந்த எருக்கத்தூண்களே இன்றும் சுவாமி சன்னிதியின் முன்னால் பொருத்தப்பட்டுள்ளது என்பது ஆலய வரலாறு சொல்லும் செய்தி. அவ்வளவு பெரிய வெள்ளெருக்குத் தூண்களை வேறெங்குமே காண முடியாது என்பது இந்த ஆலயத்தின் சிறப்புக்களில் ஒன்று. இந்த வெள்ளெருக்கன் தூண்கள் சிவாம்சமாகக் கருதப்படுகிறது

சுவாமிக்கு முன்பு வெளிப்புறத்தில் தொண்டைமான், நீலகண்ட சிவாச்சாரியார், ஸ்ரீதேவி- பூதேவி சமேத மகாவிஷ்ணு, ரச லிங்கம் ஆகிய திருவுருவங்கள் உள்ளன. பரிவாரத்தில் வீரபத்திரர், நால்வர், விநாயகர், நாகலிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், பைரவரும் அருணகிரியும் காட்சி தருகின்றனர். கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேசுவரர் சன்னிதி உள்ளன. நடராஜ சபைக்கு அருகில் தொண்டைமானுக்குக் காட்சி தந்த ரிஷப நாயகர் உள்ளார்.

சென்னை- பொன்னேரிப் பாதையில் மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகியம்மை, சென்னை - திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, இத்தலத்துக் கொடியிடை அம்மை ஆகிய மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் வடிவமைக்கப்பட்ட திருவுருக்களாகும். இவர்கள் மூவரும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று அழைக்கப்படுகின்றனர். வெள்ளிக்கிழமையோடு, பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளில், இம்மூன்று அம்பிகைகளையும் முறையே காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் தரிசித்தால் பெருஞ் சிறப்பு வந்து சேரும்.

தெற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம். அருகில் தீர்த்தக்குளம். ராஜகோபுரத்தில் நுழையும்போது எதிரில் பிரசன்ன விநாயகர் அருள்கிறார். உள்ளே கல்யாண மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தினுள் அம்பாள் சன்னிதியும், சோமாஸ்கந்தர் சன்னிதியும், சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளன வெளிப்பிரகாரத்தில் வில்வமரம் உள்ளது.

இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். 

Next Story