வள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர்


வள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர்
x
தினத்தந்தி 18 July 2018 9:43 AM GMT (Updated: 18 July 2018 9:43 AM GMT)

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும்.

வள்ளியை மணமுடித்து முருகப்பெருமான் இங்கு அமர்ந்தக் காரணத்தினால், இந்த ஊர் ‘வள்ளியூர்’ என்றானதாக பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. இவ்வூரில் குடவரைக் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் மிக அதிகம். இந்த முருகப்பெருமானுக்கு திருப்பணிகள் செய்து, கோவில் வெளிச் சுற்று பிரகாரத்திலேயே சமாதி அடைந்த இரண்டு சித்தர்களின் அருள், இந்த ஆலயத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நான்குநேரி அருகே உள்ள செண்பகராமபுதூரில் பிறந்தவர் வேலாண்டி சுவாமிகள். சிறு வயது முதலே முருகப்பெருமான் மீது அதிகப் பற்று கொண்டவர். அதுவும் வள்ளியூர் முருகன் மீது அலாதி பிரியம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் இவர் கோவிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவில் வெளியில் நின்றே முருகப்பெருமானைத் தரிசிப்பார்.

தன்னுடைய 13 வயதில் வள்ளியூர் முருகப்பெருமான் ஆலயத்தில் நடந்த கார்த்திகை தெப்பத் திருவிழாவுக்கு வேலாண்டி சுவாமிகள் வந்தார். அதன் பின் கோவில் வாசலிலேயே தங்கி விட்டார். பெற்றோர்கள் அவரை ஊருக்கு அழைத்தும், செல்ல மறுத்து விட்டார். முருகனுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். வேலாண்டி சுவாமிகள் தினமும் சரவணப் பொய்கையில் நீராடுவார். முருகனைச் சுற்றிக் கிரிவலம் வருவார். வடக்கு மற்றும் கீழ்வாசல் வெளியே நின்று முருகனை வணங்குவார். அதன் பின் கீழ்வாசலிலேயே நிரந்தரமாக தங்கி பரதேசிக் கோலம் பூண்டார். மக்களிடம் யாசகம் செய்து அதைக் கொண்டு முருகன் கோவிலில் திருப்பணி செய்தார்.

அந்தக் காலத்தில் சாதிப் பெயரைக் கூறி அழைப்பது சர்வ சாதாரணமாக வழக்கில் இருந்தது. எனவே மக்கள் அவரைப் பரதேசி என்று அழைத்தனர். வேலாண்டி சுவாமிக்கு அந்த பரதேசி என்ற பெயரே நிலைத்தது. மனிதர்களுக் குத்தான் சாதி, மதம் எல்லாம். இறைவன் அதற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு மனித மனங்களும், பக்தியும் தான் முக்கியம்.

இளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும். நோய் தீர்ந்த மக்கள் நெல், வாழை போன்ற விளை பொருட்களை அவருக்குக் காணிக்கையாக வழங்கினர். கருப்பட்டி, காசு என அவர் முன் கொண்டு வந்து கொட்டினர். பொருட்களைப் பணமாக்கி கோவிலுக்கு விளைநிலங்களை வாங்கினார். அழகப்பபுரம், கீக்குளம், பரதேசிபத்து, சாமியார் பத்து, தாழக்கடி, தெரிசனம் தோப்பு ஆகியக் கிராமங்களில் கோவிலுக்காக சுவாமிகள் வாங்கிய நிலங்கள் உள்ளன. கீக்குளத்தில் வீடு கட்டி பகலில் விவசாயம் செய்தார். அதில் கிடைக்கும் பொருளை கொண்டு மாலையில் முருகன் ஆலயத்தில் பணிவிடை செய்து வாழ்ந்தார்.

தான் பரதேசியாய் இருந்தாலும், சுவாமிகள் மாமன்னர் போன்று முருகனுக்கு தங்க அங்கித் தயார் செய்தார். அவருக்கு அதை அணிவித்து மகிழ்ந்தார். ஆலயத்துக்குள்ளே வராமல் அவர் கீழ் வாசலில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை மக்கள் வணங்கி, குழந்தைப்பேறு, வியாபாரம், தொழில்விருத்தி, நோய் நிவாரணம் ஆகியவைப் பெற்றனர். வாசலில் அமர்ந்தே தனது மனக்கண்ணால் கோவிலுக்குள் நடக்கும் அத்தனைத் திருவிழாக்களையும் காணுவார்.

ஒருநாள்.. மூலஸ்தானத்தில் தீப்பற்றி எரிகிறது என பரதேசி சித்தர் கூறவே, அனைவரும் ‘அது எப்படி மூலஸ்தானத்தில் தீப்பிடிக்கும்’ என ஆச்சரியத்துடன் கேட்டனர். உள்ளே சென்று பார்த்தால், சித்தர் சொன்னது போலவே தீ பிடிப்பதைக் கண்டனர்.

இந்த நிகழ்வுதான் பக்தர்கள் மத்தியில் அவருக்கு இருந்த சக்தியை உணர்த்தியது. அனைவரும் அவரை மகா சித்தர் என்று போற்றினர். அதன் பிறகு பரதேசி சித்தரின் திருப்பணிக்கு கூடுதலாக காணிக்கை சேர ஆரம்பித்தது.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடக்கு வாசல் அருகில் பக்தி மணம் பரப்ப ஒரு மடம் ஏற்படுத்தினார். அதன் பின் கோவிலைச் சுற்றி வர கிரிவலப்பாதையை உருவாக்கினார். கோவிலுக்கு தென்புறம் காணிக்கை வாங்கிப் பாதுகாக்க காணிக்கை மடமும் அமைத்துக் கொண்டார். எல்லா வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக் காலங்களிலும் காணிக்கை மடத்தில் வடக்கு பார்த்து தியானத்தில் அமர்ந்து இருப்பார். அப்போது அவருக்கு முருகப்பெருமானின் திருமணக்கோல காட்சி மனக்கண்ணில் கிடைத்துக்கொண்டே இருக்குமாம்.

பரதேசி சுவாமிகள் தனது இறுதி காலத்தை அறிந்தார். குறிப்பிட்ட காலத்தில் தான் சமாதி நிலை அடைவதாகவும், தன்னை சரவணப் பொய்கையின் தென் கிழக்கு மூலையில் சமாதி வைக்கவும் மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் படி பக்தர்கள் இவருக்கு சமாதி கோவில் அமைத்தனர். அதன் பிறகு அவரது அருட்கடாட்சம் வள்ளியூரை சுற்றி மலர ஆரம்பித்தது. இந்தத் துறவியின் அருள் தொடர்வதை அனுபவித்த மக்கள் அவர் சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.

சமீபத்தில் ஆன்மிக அன்பர்கள் பிரசன்னம் பார்த்தபோது, பரதேசி சித்தரின் அருள் இந்தப் பகுதியில் நிலைத்திருப்பதாகவும், மாலை நேரத்தில் ஆலயத்தில் நடமாட்டம் அல்லாமல், கோவிலைச் சுற்றிய 9 மைல் தூரத்திற்கு அவர் இருப்பதாகவும் தெரியவந்தது.

பரதேசி சித்தர் பீட மகிமை வெளிப்பட இன்னொரு காரணம், தினமும் முருகன் கோவில் மயில் ஒன்று, இவரது பீடத்திற்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்வதைச் சொல்கிறார்கள். இந்த மடத்திற்கு வருபவர்கள், தங்களது பெயரைக் குறிப்பிடாமல், தங்களின் வேண்டுதலை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதி ஜீவ சமாதி பீடம் அல்லது காணிக்கை மடத்தில் சமர்ப்பித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து ெரயில்களும் வள்ளியூரில் நின்று செல்கின்றன. ெரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந் துள்ளது. வள்ளியூர் பஸ் நிலையத்தில் இறங் கினால் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

-சித்தர்களைத் தேடுவோம்

வேலாண்டி தம்பிரான்

பரதேசி சுவாமிகள் முருகப்பெருமானின் அருளைப் பெற்றிருந்தாலும், அவர் உயிரோடு இருக்கும் வரை, மேல்தட்டு மக்கள் அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவே இல்லை. அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார் பரதேசி சித்தர். ஆனால் அவர் ஒரு அருளாசி கூறியிருந்தார்.

அது யாதெனில், ‘வருங்காலத்தில் ஒருவன் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய வருவான். அவனிடம் எல்லாம் ‘உள்ளே வராதே..’ என்று யாரும் கூற முடியாது. அவன் திறமையானவனாக விளங்குவான்’ என்று கூறியிருந்தார்.

அதுபோலவே பிற்காலத்தில் மிளகாய் சாமியார் என்கிற வேலாண்டி தம்பிரான் சுவாமிகள் அவதரித்தார்.

கொல்லம் ஆண்டு 1035 (1859)-ல் சித்திரை மாதத்தில் அசுபதி நட்சத்திரத்தில் வேலாண்டித் தம்பிரான் பிறந்தார். இவரது தந்தை சிதம்பரத் தேவர். மகனை இறைப்பக்தியுடன் வளர்த்தார். இறை நாட்டம், தந்தையின் ஊக்குவிப்பு வேலாண்டி தம்பிரானை ஆன்மிகச் சுடராய் உயர்த்தியது. பரதேசி சித்தரை போலவே 13-வது வயதிலேயே உலக வாழ்வை வெறுத்து துறவற வாழ்வில் விருப்பம் கொண்டார்.

பள்ளிப் படிப்பே அறியாத வேலாண்டி தம்பிரான் கல்விச் செல்வத்தில் சிறந்து விளங்கினார். சிறந்தக் கவியாகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்தார். பரதேசி சித்தர் தொடங்கி வைத்தப் பணியைத் தொடர்ந்து செய்தார். சுவாமிகள் 33 வருடங்கள் கோவில் தர்மக்கர்த்தாவாகப் பணியாற்றினார். அக்காலத்தில் திருக்கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்தார். திருத்தேர் உருவாக்கினார். சண்முகர் மற்றும் அம்மாளுக்கு வெள்ளி அங்கியை உருவாக்கினார். சண்முகருக்கு தனி பிரதிஷ்டை மடம் அமைத்தார். கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். இறைவன் பிரசாதமாகத் திருநீறு வைத்து வழங்க, பன்னீர் இலைகளுக்காகப் பன்னீர் மரங்களை உருவாக்கி அதை நன்கு வளர்த்தார்.

அன்னமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழைப்பழம், மிளகாய் வத்தல், மோர் ஆகியவற்றால் தனது பசியை போக்கிக் கொண்டார். எனவே இவரை ‘மிளகாய் வத்தல் சாமி’ என்று மக்கள் அழைத்தனர். இவர் கோபத்திலும் குணத்திலும் சிறந்தவராக விளங்கி வந்தார்.

இவர் 1966-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10-ம் நாள், இறைவன் திருவடி நிழலில் யோக சமாதி அடைந்தார். இவரது சமாதி வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால் நாள்பட்ட நோய்கள் நீங்கும். தீராத கடன் பிரச்சினை தீரும் என்கிறார்கள். 

Next Story