முன்னேற்றம் தரும் முன்னோர் வழிபாடு


முன்னேற்றம் தரும் முன்னோர் வழிபாடு
x
தினத்தந்தி 25 Sep 2018 10:57 AM GMT (Updated: 25 Sep 2018 10:57 AM GMT)

25-9-2018 மகாளய பட்சம் ஆரம்பம்

புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை திதி தொடங்கி அமாவாசை வரையிலான காலத்தை ‘மகாளய பட்சம்’ என்கிறார்கள். இது பித்ருக்களை (முன்னோர்கள்) வழிபடுவதற்கு உகந்த காலமாகும். இந்த ஆண்டு மகாளயம் இன்று (25-9-2018) செவ்வாய்க்கிழமை தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை உள்ளது. இந்த நாட்களில் பித்ருக்களுக்குரிய தர்ப்பணம், சிரார்த்தம் முதலியவற்றை தவறாமல் செய்யவேண்டும். மகாளய அமாவாசை தினத்தன்று நம் பித்ருக்கள் அனைவரும், சூரிய சந்திர உலகத்துக்கு வருவதால், அனைத்து உறவினர்களுடைய சந்திப்பும் நிகழ்கிறது. அன்றைய தினம் செய்கின்ற தர்ப்பணத்தில் நாம் விடும் எள் மற்றும் தண்ணீரை, சுவேதா தேவி என்பவள் மிக எளிதாக பித்ருக்களிடம் சேர்த்துவிடுவதாக நம்பிக்கை.

மனிதர்கள் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் ஐந்து என்று சொல்லப்படுகிறது. அவை பிதுர்யக்ஞம் (தர்ப் பணம் மூலமாக முன்னோர்களுக்கு உணவளிப்பது), தேவயக்ஞம் (யாகங்கள், ஹோமங்கள் மூலமாக தேவர்களுக்கு உணவளிப்பது), பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது.

வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும், நமது முற்பிறப்பு பாப புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில், பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால், அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சுபகாரியத் தடை, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். மேற்படி துர்பலன்களால் அவதிப்படுவோர்களுக்கு அருமருந்தாக அமைந்திருப்பது தான் இந்த மகாளய புண்ணிய காலம். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த மகாளய புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெற்றுக்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ள முடியும்.

நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றவர்கள். அவர்களுக்கும், நம் முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிரயாச்சித்தமாகவும் மகாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது. இந்த மகாளயபட்ச பதினைந்து நாட்களிலும், பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதாக ஐதீகம். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்கிறார்கள்.

அதன் மூலம் அவர்கள் திருப்தி யடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மகாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளய பட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும். சிறியதாகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம். தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோட்சனம் செய்யலாம். அதாவது பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். உங்கள் முன்னோர்களின் திதியன்று அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு உணவிடலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் வழங்கலாம்.

மகாளய பட்ச தர்ப்பண பலன்

பிரதமை - செல்வம் பெருகும்

துவிதியை - வாரிசு வளர்ச்சி

திருதியை - திருப்திகரமான

இல்வாழ்க்கை

சதுர்த்தி - பகை விலகும்

பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும்

சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும்

சப்தமி - மேல் உகத்தார் ஆசி

அஷ்டமி - நல்லறிவு வளரும்

நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

ஏகாதசி - வேதங்கள், கல்வி, கலைகளில் சிறக்கலாம்

துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

சதுர்த்தசி - கணவன்-மனைவி ஒற்றுமை

அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.

பித்ரு தர்ப்பணம்


சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி, அவர்கள் நமக்கு ஆசி வழங்குவார்கள்.

அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும், அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்வார்கள் என்றும், அதுவே தோஷமாக மாறும் என்றும் சொல்லப் படுகிறது.

வீட்டில் பசியால் வாடும் தனது பெற்றோருக்கு உணவளிக்காமல், தெய்வத்திற்கு படையல் போட்டு நைவேத்தியம் செய்தாலும், ஆடை இன்றி தாய் தந்தையர் கஷ்டப்படும் போது, தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதாலும் பலன் கிடைக்காது. பித்ரு தோஷம் தான் வந்து சேரும்.

தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில், சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைப்பது நல்லது.

மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் 96 நாட்கள். இவைகளில் மன்வாதி நாட்கள்-14, யுகாதி நாட்கள் - 4, மாதப்பிறப்பு நாட்கள் - 12, அமாவாசை - 12, மகாளய பட்சம் - 16, வ்யதீபாதம்- 12, வைத்ருதி - 12, அஷ்டகா -4, அன்வஷ்டகா - 4, பூர்வேத்யு- 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த 96 நாட்களை விட, சிரார்த்தம் செய்ய மிக மிக உத்தமமான நாள் தாய், தந்தையாின் திதி நாள் தான்.

துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணியங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக்கூடாது.

ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும். 

Next Story