ஆன்மிகம்

இறை வேதங்களை நம்புவது + "||" + Believe in the Scriptures

இறை வேதங்களை நம்புவது

இறை வேதங்களை நம்புவது
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவேதங்களை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.
இறைநம்பிக்கையில் அடுத்த கட்டம் இறைவேதங்களை நம்புவது. இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதங்களையும், சுஹுபுகள் எனும் சிறிய ஏடுகளையும் உண்மை என உளமாற நம்ப வேண்டும்.

பிரதான இறைவேதங்கள் என்று வரும்போது முக்கியமான நான்கு வேதங்களை குறிப்பிடலாம். அவை வருமாறு:-

தவ்ராத்:இது அப்ரானி எனும் ஹிப்ரு மொழியில் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளினான். மேலும் அவருக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அளித்தான்.

சபூர்:இது யூனானி எனும் கிரேக்க மொழியில் தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கினான்.

இன்ஜீல்:இது ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி மொழியில் இறைவன் இறக்கிவைத்தான்.

திருக்குர்ஆன்:இது அரபி மொழியில் முகம்மது (ஸல்) அவர் களுக்கு இறைவன் அருளினான். இந்த வேதம் படிப்படியாக 23 ஆண்டுகள் அருளப்பட்டது.

இதைத்தவிர முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும், ஷீது (அலை) அவர்களுக்கு ஐம்பது ஏடு களையும், இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு முப்பது ஏடுகளையும், இப்ராகிம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அருளினான்.

மேற்கூறப்பட்ட நான்கு இறைவேதங்களும், 110 ஏடுகளும் இறைவனின் திருவசனங்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன்’ என்று கூறுவீராக’. (42:15)

‘தவ்ராத்தையும் நாம் அருளினோம், அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது’. (5:44)

‘நபிமார்களில் சிலரைவிட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் (வேதத்தை) கொடுத்தோம்’. (17:55)

‘தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீல் வேதத்தையும் வழங்கினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது’. (5:46)

‘இன்ஜீலுக்குரியோர் அதில் இறைவன் அருளியதின் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும்’. (5:47)

‘உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை (திருக்குர்ஆனை) தன் அடியார் (முகம்மது (ஸல்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்’. (25:1)

‘(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தை, (திருக்குர்ஆனை படிப்படியாக) அவன் தான் உம்மீது இறக்கி வைத்தான். இது இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும். தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்’.

‘இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக நன்மை-தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் புர்கான் (எனும் குர்ஆனையும்) இறக்கிவைத்தான். ஆகவே, எவர் இறைவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்’. (3:3,4)

இறைவேதங்களான நான்கு வேதங்களும் வெவ்வேறு வகையான காலகட்டங்களில் வெவ்வேறு நபிமார்களுக்கு இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்டது. முந்தைய வேதத்தை, பின் இறக்கியருளப்பட்ட வேதம் உண்மைப்படுத்துகிறது; அதை பாதுகாக்கவும் செய்கிறது.

நான்கு வேதங்களும் மக்களை நல்வழிப்படுத்தவே இறங்கியது. அவை மக்களுக்கு பலவிதமான வகையில் ஒளிவீசும் நேர்வழி காட்டுபவைகளாகவே அமைந்தன.

இறுதியாக வந்த இறைவேதமாகிய திருக்குர்ஆனும், இறுதித்தூதராக அனுப்பப்பட்ட முகம்மது (ஸல்) அவர்களும் முந்தைய வேதங்களையும், முந்தைய நபிமார்களையும் ஏற்று, மெய்ப்படுத்தினார்கள்.

‘உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதற்காகவும், அதை பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே இறைவன் அருளியதின் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக’. (5:48)

‘(முஹம்மதே) நேர்வழி நோக்கி அழைப்பீராக, உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர். இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு’. (42:15)

‘எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்கு தடைசெய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே, இறைவனை அஞ்சுங்கள், எனக்குக் கட்டுப்படுங்கள் என்றும் கூறினார்’. (3:50)

‘இது (திருக்குர்ஆன்) மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்’. (3:138)

மேலும், வேதம் அருளப்பட்ட நபிமார்களும் தங்களுக்கு இறங்கிய வேதத்தை நம்பவேண்டும். இறைநம்பிக்கையாளர்களும் அனைத்து வேதங்களையும், ஏடுகளையும் நம்பவேண்டும். இந்த நம்பிக்கை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

‘நம்பிக்கை கொண்டாரே, இறைவனையும், அவனது தூதரையும், தமது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்’. (4:136)

‘இத்தூதர் (முகம்மது) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். இறை நம்பிக்கை கொண்டோரும் இதை நம்பினார்கள். ஒவ்வொருவரும் இறைவனையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பினார்கள்’. (2:285)

நான்கு இறைவேதங்களும் நான்கு சமுதாயத்தினருக்கு மட்டுமே உரிமையானது அல்ல. அகில உலக மக்களுக்கும் உரித்தானது. உலக மக்கள் அனைவருக்கும் நேரான பாதையை காட்டி, அவர்களை நேர்வழிப்படுத்தக்கூடியது.

இறுதியாக இறங்கிய திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.

இன்று வரை அன்று இறங்கியது போன்றே திருக்குர் ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்ற முடியாது. மாற்றத்திற்கு உட்படாதது. இதில் சந்தேகம் என்பதே கிடையாது.

இதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆராயலாம், பின்பற்றலாம். இது உங்கள் உரிமை. இது உங்கள் வேதம்.

(நம்பிக்கை தொடரும்)