ஆலய முற்றம் மேலானது!


ஆலய முற்றம் மேலானது!
x

பைபிள் மனித உடலை இறைவன் குடிகொள்ளும் ஆலயமாய் சித்தரிக்கிறது. இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தை புனிதமாய்க் காத்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு.

பைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான, பிரபலமான நூல் திருப்பாடல்கள் (சங்கீதம்). அதில் தாவீது மன்னன் எழுதிய ஒரு திருப்பாடலின் சில வரிகள் இவை.

"வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும், உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. (திருப்பாடல்கள் 84:10)

"ஆயிரம் நாட்கள் வசதியான இடங்களில் வாழ்வதை விட இறைவனுடைய ஆலயத்தின் முற்றங்களில் ஒரு நாள் வாழ்வதே சிறந்தது" என்கிறார் அவர். நமது வாழ்க்கையில் எது முதன்மையானதாய் இருக்கிறது என்பதைக் கொண்டு நமது வாழ்க்கை எப்படி அமைகிறது, யாருக்கு ஏற்புடையதாய் அமைகிறது என்பதைக் கண்டுகொள்ளலாம்.

எத்தனை நாட்கள் வாழ்ந்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம் என்பதே தேவையானது. எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல, எங்கே வாழ்ந்தோம் என்பதே அவசியமானது. இறைவனை உளமாரத் தேடுபவர்களுக்கு, இறைவனுடைய ஆலயத்தின் உள்ளே இருப்பதல்ல, அவரது ஆலயத்தின் முற்றங்களில் இருப்பதே கூட மகிழ்ச்சியானதாய் இருக்கிறது. இறைவனின் இல்லத்தில் அமர்ந்திருப்பதே அவ்வளவு இன்பமெனில், இறைவனின் இல்லமாக நாம் அமர்ந்திருப்பது எத்தனை உன்னதமானது. எத்தனை மேலானது!

பைபிள் மனித உடலை இறைவன் குடிகொள்ளும் ஆலயமாய் சித்தரிக்கிறது. இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்தை புனிதமாய்க் காத்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு. உள்ளம் புனிதமாய் இருக்கும் போது தான், உள்ளத்திலிருந்து வெளிவருகின்ற சிந்தனைகளும், செயல்களும் புனிதமாய் இருக்கும். அதைத் தான் இயேசு சொன்னார், "மனிதனின் உடலுக்குள் செல்வது அவனை மாசுபடுத்துவதில்லை. அவன் இதயத்தில்இருந்து வெளிவருபவையே அவனை மாசுபடுத்துகின்றன".

இதயத்திலிருந்து மாசற்ற சிந்தனைகள் வெளி வரவேண்டுமெனில், மாசற்றவர் இதயத்தில் அமர்ந்திருக்க வேண்டும். இறைவனே இதயமாய் அமர்ந்திருக்க வேண்டும். இதயத்தில் நெருஞ்சிகளை வளர்த்துக் கொண்டிருந்தால், செயல்களில் மலர்கள் வெளிப்படுவதில்லை.

"மூன்று ஆண்டுகள் வெளியிடத்தில் வாழவேண்டுமா? ஒரு நாள் இறைவனின் வாசலில் வாழவேண்டுமா?" என்று நம்மிடம் யாராவது கேட்டால் என்ன சொல்வோம்?

"மூன்றாண்டுகள் வெளியிடத்தில் வாழ வேண்டுமெனக் கேட்போம்".

நமது சிந்தனைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்படுகிறது. எவ்வளவு பணம், எத்தனை வீடுகள், எத்தனை கார், எவ்வளவு சொத்து, என்ன வேலை, எவ்வளவு புகழ் என்பவை தான் நமது அளவீடுகள். அதிகமாய் இருக்க வேண்டும், ஆடம்பரமாய் இருக்க வேண்டும் எனும் அவஸ்தையும், தேடலுமே நம் வாழ்க்கையை இயக்குகிறது.

இறைவனின் ஆலயத்தில் இருப்பது என்பது, நாம் இறைவனின் கோவிலில் சென்று அமர்ந்திருப்பதல்ல. அவருடைய எல்லையில் வாழ்வது. அவர் நமக்குப் போட்டுக் கொடுத்த வாழ்வியல் நெறிகளின் படி வாழ்வது. அதுவே நிம்மதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான வாழ்க்கை.

பல வேளைகளில், நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்கு பணம் தேவையென நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறோம். நிம்மதி தருபவரை உதறிவிட்டு, நிம்மதியை வேறெங்கோ தேடிக்கொண்டிருக்கிறோம். நிம்மதி என்பது நாம் இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்வது. நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமெனில், பிறருக்கு நிம்மதி வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்பதே இறைவனின் விதி.

'நீங்கள் எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்'. நீங்கள் நிம்மதியை விதைத்தால் நிம்மதியை அடைவீர்கள்.

உள்ளத்தின் ஆழத்தில் சில கேள்விகளைக் கேட்போம்.

எனது தேடல் இறைவனின் அருகாமையா, உலகத்தின் வசீகரமா?;

எனது தேடல் உயிர்வாழ்தலின் ஆசையா? இறையோடு வாழ்தலின் ஆசையா?;

எனது விருப்பம் பொல்லாரின் உறைவிடங்களில் கிடைக்கும் உல்லாச நிமிடங்களா? அல்லது ஆலய வாயிலில் இருக்கும் தூங்கா நிமிடங்களா?;

எனது வாழ்க்கை மனிதநேயத்தைச் சார்ந்திருக்கிறதா. இல்லை சிற்றின்பக் கொண்டாட்டங்களில் சிக்கிக் கிடக்கிறதா?;

வறுமையின் வாசலில் படுத்திருக்கும் ஏழையோடு என்னை அடையாளப்படுத்துகிறேனா? அல்லது அந்த ஏழையைக் கண்டு சற்றும் மனம் இரங்காத செல்வந்தனோடு என்னை அடையாளப்படுத்துகிறேனா?;

இயேசுவின் ஆலயங்களில் வாழ்தல் என்பது மனிதநேயத்தின் தளத்தில் பயணிப்பது. ஏழைகளின் சார்பாக நிற்பது. நோயில் கிடப்பவரைச் சென்று சந்திப்பது. சிறையில் வாடும் மனிதர்களுக்கும் நம்பிக்கை நற்செய்தி அறிவிப்பது, ஆடையின்றித் தவிப்பவர்க்கு ஆடைகள் வழங்குவது, புறக்கணிக்கப்பட்டோரின் பக்கம் நம்மை இணைத்துக் கொள்வது. எளியோருக்காய் வாதாடுவது.

இதையே இயேசு செய்தார். இதைச் செய்யும் போது தான் நாம் இயேசுவின் பிரகாரங்களில் சுற்றிவரும் பக்தர்கள் ஆகிறோம். நமது வாழ்க்கையை சுயநலத்தின் மையத்தில் ஒட்டி வைக்காமல், பொது நலத்தின் எல்லைகளில் நட்டு வைப்போம். நம்மைச் சந்திப்பவர்கள், ஆலயத்தைச் சந்தித்தது போல அமைதி அடையவேண்டும். நம் செயலைக் காண்பவர்கள் உள்ளே இருந்து செயலாற்றுபவரை உணர வேண்டும். நம்மோடு பேசுபவர்கள் இயேசுவின் மென்மையான கனிவின் குரலைக் கேட்கவேண்டும்.

சிந்திப்போம், வாழ்க்கையின் முதன்மைகளை இறைவனை மையமாய்க் கொண்டு மாற்றியமைப்போம்.


Next Story