முருகப்பெருமான் சிலையிலேயே கைவைப்பா?


முருகப்பெருமான் சிலையிலேயே கைவைப்பா?
x
தினத்தந்தி 8 April 2018 8:23 PM GMT (Updated: 2018-04-09T01:53:36+05:30)

முருகப்பெருமான் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீடுகளில் குடியிருக்கிறார் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.

மூன்றாம்படை வீடான பழனியில் முருகப்பெருமானை ஒரு வித்தியாசமான கோணத்தில் காணலாம். எல்லாவற்றையும் துறந்து, கையில் ஒரு தண்டம் பிடித்தபடி ஆண்டிகோலத்தில் காட்சியளிப்பார். ஞானப்பழத்துக்காக விநாயகருக்கும், முருகப்பெருமானுக்கும் நடந்த போட்டியில் விநாயகப் பெருமான் வெற்றிபெற்று பழத்தை பெற்றதால், சினத்துடன் முருகப்பெருமான் நின்ற இடம்தான் பழனி. முருகப்பெருமானின் சினத்தை தணிக்க சிவபெருமானும், உமையாளும், அவ்வைப்பாட்டியும் வந்து பழமே நீதான். உனக்கு ஒரு பழம் வேண்டுமா என்று கூறி சமாதானப்படுத்தும்போது கூறிய வார்த்தையான ‘‘பழம் நீ’’ என்பது மருவி, ‘‘பழனி’’ ஆனது என்றும் காலம்காலமாக கூறப்படுகிறது.

 பழனியில் முருகப்பெருமானின் சிலையை போகரால் நவபாஷாண சிலையாக, 9 பாஷாணங்கள் சேர்க்கப்பட்டு, அதனுடன் பல மூலிகை சாறுகள் கலந்து தயாரிக்கப்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. போகர் தலைமையில் 81 சித்தர்கள், 81 வஸ்துக்களை 9 கலவைகளாக்கிய பிறகே இந்த சிலை வடிக்கப்பட்டது. இந்த சிலை பல மருத்துவ குணங்கள் கொண்டதால் இது தெய்வீக மருத்துவ சிலையாக பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். பாஷாணங்களை வைத்து செய்யப்பட்ட இந்த சிலை, வெப்பத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அதற்காகத்தான் தொடர்ந்து அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட அபூர்வ முருகன் சிலை தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்டத்தால் சேதம் அடைந்துள்ளதாக ஒரு கருத்து வெளிவந்தது. ஆனால், அப்படி சேதம் ஏற்படவே இல்லை என்று புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது.

முருகன் சிலை சேதம் அடைந்ததாகக்கூறி, புதிய முருகன் சிலை செய்ய 2003–ல் முடிவு செய்யப்பட்டு, புதிய சிலை செய்யும் பொறுப்பு முத்தையா ஸ்தபதியிடம் கொடுக்கப்பட்டது. ஒரேகோவிலில் 2 மூலவர்களா என்றும், மூலவர் சிலையை மறைக்கும் வகையில் புதிய மூலவர் சிலையா என்றும் அப்போதே எதிர்ப்பு கிளம்பியது. புதிய சிலை ஆகமவிதிகளுக்கு மாறாக வடிவமைக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் புகார் கூறப்பட்டது. இந்த ஐம்பொன் சிலை வைக்கப்பட்டு சில நாட்களிலேயே கருக்க தொடங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. அதைத்தொடர்ந்து இந்த புதிய சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. புதிய சிலையை செய்ததன் நோக்கமே மருத்துவ சக்திவாய்ந்த மூலவர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்தும் முயற்சி என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்த சிலையை செய்த முத்தையா ஸ்தபதியும், அப்போது நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜாவும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தையா ஸ்தபதி காஞ்சீபுரம் கோவிலிலும் சோமஸ்கந்தர் சிலை வடிவமைத்ததில் முறைகேடு செய்ததாக வழக்கு இருக்கிறது.

சிலைதடுப்பு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தன் தீவிர நடவடிக்கையை பரவலாக்கி, இதுபோல புதிய சிலைகள் செய்யப்பட்ட அனைத்து கோவில்களிலும் ஆகம முறைப்படி தவறில்லாமல் நடந்ததா என்று புலன்விசாரணை செய்யவேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும். அனைத்து சிலைகளும் ஒரிஜினல்தானா என்பதை கண்டறியவேண்டும்.

Next Story