கொரோனா பயம் இல்லையே!


கொரோனா பயம் இல்லையே!
x
தினத்தந்தி 21 April 2022 8:00 PM GMT (Updated: 2022-04-22T01:30:57+05:30)

தமிழக மக்கள் கொரோனா என்பதையே மறந்துவிட்டார்கள். கொடிய கொரோனாவால் கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்டது.

தமிழக மக்கள் கொரோனா என்பதையே மறந்துவிட்டார்கள். கொடிய கொரோனாவால் கொத்து கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்டது. மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டது, ஆக்சிஜன் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு நிலவியது, மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களும் ‘பிழைத்து வந்தால்தான் நிச்சயம்’ என்ற நிலை இருந்தது, இவை எல்லாமே மக்கள் மனதில் இப்போது இல்லை என்பது வருந்தத்தக்கதாக இருக்கிறது. ஒவ்வொரு அலையிலும் தொடக்கத்தில் மிகக்குறைவான அளவு பாதிப்பு, பின்பு மிக அதிகமான பாதிப்புகளால் உச்சத்துக்கு சென்று, பிறகு படிப்படியாக குறைந்து இனி ஒழிந்துவிடும் என்று நம்பிக்கொண்டு இருந்த நிலையில், மீண்டும் அடுத்த அலையாக விஸ்வரூபம் எடுப்பது என்ற நிலையில் கொரோனா கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது.

அதே ஆட்டத்தில், இப்படி தமிழ்நாட்டில் 3 அலைகளை பார்த்துவிட்டோம். 3-வது அலையில் நன்றாக குறைந்து வந்த கொரோனா இப்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கியுள்ளது கவலை அளிக்கிறது. சென்னை ஐ.ஐ.டி. ஹாஸ்டலில் 12 பேருக்கு நேற்று ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு இருக்குமோ? என்று அஞ்சப்படுகிறது. கொரோனாவை தடுக்க வேண்டும் என்றால், மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக 3 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த மூன்றுமே இப்போது காற்றிலே கலந்த நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பற்றிய பயம் இருந்த நேரத்தில் எல்லோருமே முககவசம் அணிந்தார்கள். இதை கட்டாயப்படுத்த முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் ரோட்டில் நின்றுகொண்டு முககவசம் அணியாதவர்களிடம் ஆங்காங்கே அபராதம் விதித்த நேரங்களில், எல்லோருமே முககவசம் அணிந்தார்கள். இப்போது ‘அபராதம் விதிக்கப்படாது, ஆனாலும் முககவசம் அணிய வேண்டும்’ என்று அரசு அறிவித்ததில் இருந்து, ‘முககவசமா? அப்படி என்றால் என்ன?’, என்று மக்கள் கேட்கும் நிலை இருக்கிறது. சமூக இடைவெளி இல்லை என்பதற்கு ‘தினத்தந்தி’யில் கடந்த திங்கட்கிழமை வந்த மெரினா கடற்கரையில் இருந்த மக்கள் வெள்ள கூட்ட படமே சாட்சி.

தடுப்பூசி போடுவதை பொருத்தவரை தொடக்கத்தில் ஆயிரக்கணக்கில் போட்டு வந்தார்கள். வாரம் ஒருமுறை தமிழக அரசின் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை 50 ஆயிரம் இடங்களில் நடத்தி வந்த முகாம்களில் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி போட்டு வந்தார்கள். கடைசியாக மிக குறைந்த அளவில் மக்கள் தடுப்பூசி போடவந்ததால், இப்போது வாரம் ஒருமுறை சிறப்பு முகாம்கள் நடத்துவதும் நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் இப்போது மொத்தம் தகுதிவாய்ந்தவர்களில் முதல் டோஸ் போட்டவர்கள் 92.4 சதவீதம் பேர்கள். 2-வது தவணை போட்டவர்கள் 77.55 சதவீதம் பேர்கள் தான். 3-வது தவணையான ‘பூஸ்டர்’ டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவாகவே இருக்கிறது. அண்டை மாநிலமான ஆந்திராவில் முதல் தவணை, 2-வது தவணை தடுப்பூசிகள் இரண்டுமே நம்மைவிட அதிகமாக போட்டுவிட்டார்கள். பல மாநிலங்கள் தமிழ்நாட்டை விட முன்னணியில் இருக்கின்றன. தேசிய சராசரியும் தமிழ்நாட்டை விட அதிகமாகவே இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில்தான் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்துவிடுமோ? என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம், கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதையெல்லாம் கடைப்பிடிக்க அரசு மிக தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு இதன் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கொரோனா என்ற அரக்கனை முற்றிலுமாக ஒழிக்கும் வரை, இதை ஒரு போர் போல கருதி செயல்படவேண்டும் என்பதே இப்போது உள்ள நிலைப்பாடாக இருக்கிறது.

Next Story