மனை உரிமையாளர் - கட்டுனர் இடையே கூட்டு கட்டுமான ஒப்பந்தம்


மனை உரிமையாளர் - கட்டுனர் இடையே கூட்டு கட்டுமான ஒப்பந்தம்
x
தினத்தந்தி 15 Dec 2018 7:32 AM GMT (Updated: 15 Dec 2018 7:32 AM GMT)

முதலீட்டு அடிப்படையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்பகுதி அல்லது புறநகர் பகுதியில் வாங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு மனை உரிமையாளர்களுக்கு ஏற்றதாக ‘ஜாயிண்டு வென்ஜர்’ ( Joint Venture) என்ற கூட்டு கட்டுமான வர்த்தக அணுகுமுறை இருப்பதாக ரியல் எஸ்டேட் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கூட்டு கட்டுமானம்

மனையை விற்பனை செய்யாமலும், முதலீடுகள் எதுவும் போடாத நிலையிலும் பொருளாதார ரீதியாக நன்மைகளை அளிக்கும் விதத்தில் இந்த திட்டத்தை பலரும் மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது. இன்றைய நிலையில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டுமான தொழில் புரிவோர் என பலரும் மேற்கண்ட கூட்டு கட்டுமான முறையை பின்பற்றி வருகிறார்கள்.

இரு தரப்பு ஆதாயம்

அதாவது, மனை அதன் உரிமையாளருக்கு சொந்தம். அதில் அமைந்துள்ள கட்டுமானங்கள் நிறுவனம் அல்லது கட்டுனருக்கு சொந்தம். அதன் அடிப்படையில் மனை உரிமையாளருக்கு ஒரு வீடு தரப்பட்ட நிலையில், மற்ற வீடுகளை விற்பனை செய்து அதில் பெற்ற வருமானத்தில் கட்டுமான செலவுகள் போக உள்ள லாபத்தில் இடத்தின் உரிமையாளருக்கும், கட்டுனருக்கும் சம பங்கு என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆலோசகர்கள் அளிக்கும் தகவல்

சற்று பெரிதாக சொந்த மனை உள்ள உரிமையாளர்கள் வர்த்தக ரீதியாக மேற்கண்ட ‘ஜாயிண்டு வென்ஜர்’ திட்டத்தை செயல்படுத்த விரும்பும் நிலையில் எந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி ரியல் எஸ்டேட் சட்ட ஆலோசகர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.

* சம்பந்தப்பட்ட கட்டுனர் அல்லது கட்டுமான நிறுவனம் தக்க உள் கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்க வேண்டும். மேலும், அவர்களது முந்தைய புராஜெக்டுகள் எவ்வாறு முடிக்கப்பட்டன என்பதை கவனிக்க வேண்டும்.

* குறிப்பாக, அந்த கட்டுனர் மூலம் இடம் அல்லது மனையின் உரிமையாளருக்கு தக்க உரிமைகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். கட்டுமானங்களின் உறுதி தன்மை, கட்டுனரின் ஒப்பந்த முறைகள், பிளான் மற்றும் அப்ரூவல் போன்றவை முறைப்படி பெறப்பட்டு சொத்தின் உரிமையாளருக்கு தரப்பட்டுள்ளது போன்ற விஷயங்களையும் அறிந்த பின்னர் தக்க ஆவணங்கள் மூலம் அந்த கட்டுனர் அல்லது நிறுவனத்திடம் ஒப்பந்தம் (Agreement for Joint Venture) செய்து கொள்ளலாம்.

* மனை அல்லது இடத்தின் உரிமையாளர் மூல ஆவணங்கள் அவரிடமே இருக்க வேண்டும். ‘பவர்’ அதிகார பத்திரம் பெற்ற கட்டுனர் மனையின் மீது ‘புராஜெக்ட் லோன்’ பெறும் வாய்ப்புகள் உள்ளதை கவனிக்க வேண்டும்.

* பிளான், அப்ரூவல், கார்ப்பரேஷன் மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற அலுவலகங்களில் மனை உரிமையாளர் பேரில் அனுமதி பெறவும், கட்டுமானம் கட்ட, மின் இணைப்பு பெற மற்றும் கட்டி முடித்த அவரது பகுதிகளை மட்டும் விற்பனை செய்வது போன்ற விவரங்கள் பவர் பத்திரத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

* கட்டுமான பணிகளில் கால அவகாசம் முக்கியம் என்ற நிலையில் தவிர்க்க முடியாத தாமதங்கள் தவிர, மற்ற தாமதங்களுக்கு பில்டர் பொறுப்பு ஏற்பது முறை. தாமதம் ஏற்படும் நிலையில் கால தாமத அபராத தொகை பற்றி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

* கட்டுனரால் கட்டி முடிக்கப்பட்டு அளிக்கப்பட்ட பகுதிக்கு ஈடாக மனை உரிமையாளர்கள் வழங்கும் பிரிக்கப்படாத பாக நிலத்திற்கு தகுந்த ஆவணங்களை அளிப்பது பற்றிய தகவல்களும் ஒப்பந்தத்தில் இருக்கவேண்டும்.

* கட்டுமான பணிகள் முடிந்து பணி நிறைவு சான்றிதழுடன் மனை உரிமையாளருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டின் உரிமையை கட்டுனரிடம் இருந்து சுவாதீன ஒப்படைப்பு கடிதத்துடன் பெற்றுக்கொள்வது முக்கியம்.

Next Story