ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிக்கு ஏற்ப குறைக்கப்பட்ட வரி விகிதங்கள்
வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.
வீடுகளுக்கான ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும், குறைந்த விலை வீடுகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது. இதற்கான முடிவு கடந்த மாதம் 24–ம் தேதி டெல்லியில் நடந்த 33–வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
அதன்படி குறைக்கப்பட்ட வரி விகிதங்கள் ஏப்ரல் 1–ம் தேதி முதல் அமல் செய்யப்பட உள்ளது. இதை செயல்படுத்தும் விதம் பற்றி டெல்லியில் நடந்த 34–வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
* புதிய வீட்டு வசதி திட்டங்களை பொறுத்த மட்டில், குறைந்த விலை வீடுகளுக்கு உள்ளீட்டு வரி சலுகை இல்லாமல் 1 சதவிகித வரி அமல்படுத்தப்படும். குறைந்த விலை வீடு என்பது ஜி.எஸ்.டி கவுன்சில் தீர்மானித்தபடி, மாநகரங்கள் தவிர்த்த நகரங்களில் 60 சதுர மீட்டர் (645 சதுர அடி) பரப்பளவாகவும், மாநகரங்களில் 90 சதுர மீட்டர் (968 சதுர அடி) பரப்பளவு உள்ளதாகவும் இருக்கலாம். அத்தகைய வீடுகள் ரூ.45 லட்சம் வரை சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கலாம்.
* ஏப்ரல் 1–ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகிற வீட்டு வசதி திட்டங்களுக்கு, பழைய சரக்கு, சேவை வரியை தொடர்வது பற்றி முடிவு எடுப்பதற்கு வீட்டு வசதி நிறுவனங்களுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு வழங்கப்படும். வீட்டு வசதி நிறுவனங்களுக்கு அந்த வாய்ப்பு நல்ல சலுகையாக அமைகிறது.
* குறைந்த விலை வீடுகளை தவிர்த்து பிற வீடுகளுக்கு, அவை ஏப்ரல் 1–ம் தேதியோ, அதற்கு பின்னரோ பதிவு செய்து இருந்தால் அவற்றுக்கு உள்ளீட்டு வரி சலுகையின்றி 5 சதவீத ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். ஏப்ரல் 1–ம் தேதிக்கு பின்னர் தவணை செலுத்தக்கூடிய வீடுகளுக்கு இந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு பொருந்தும்.
* ஜி.எஸ்.டி கவுன்சிலின் 34–வது கூட்டத்தில் சிமெண்டு வரி குறைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், கூட்டத்தில் புதிய முடிவுகளை எடுக்கவோ அல்லது அறிவிக்கவோ வாய்ப்புகள் இல்லை.
Related Tags :
Next Story