இலக்கை நோக்கிய பாதையில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டம்
‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை 2022–ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அரசு பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை 2022–ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் அரசு பல்வேறு செயல் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்புகளை தேடியும், தொழில் காரணங்களுக்காகவும் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில், குடியிருப்பு வசதிகளை மேம்படுத்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒரு கோடி வீடுகளை கட்டமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மூன்று கட்டங்கள்
இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டம் 2015–ம் ஆண்டு முதல் 2017–ம் ஆண்டுக்குள் 100 நகரங்களில் மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி முடிப்பது, இரண்டாம் கட்டம் 2017–ம் ஆண்டு முதல் 2019–ம் ஆண்டு வரை மொத்தம் 200 நகரங்களில் மேம்பாட்டு பணிகளை செய்வது, மூன்றாவது கட்டம் எஞ்சிய நகரங்களில் 2019–ம் ஆண்டு முதல் 2022–ம் ஆண்டுக்குள் மேம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொள்வது என்ற நிலைகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக, திட்டத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள்
சமீபத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் (MoHUA) பாராளுமன்றத்தில் அளித்த தகவல்களின்படி 2019, ஜனவரி–31 தேதி வரையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் 15,263 கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் 72,65,763 வீடுகளுக்கு ஒப்புதல் தரப்பட்ட நிலையில், 14,42,796 வீடுகளின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 37,54,871 வீடுகளின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்கள்
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 57 சதவிகிதம் வீடுகள், ஆந்திரா, உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்த வரிசையில் சுமார் 43 சதவிகித வீடுகளை கட்டமைத்து குஜராத் முன்னிலையில் உள்ளது. மேலும், ராஜஸ்தானில் 31 சதவிகித வீடுகளும், மேற்கு வங்கத்தில் 29 சதவிகித வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் நகர்ப்புற பகுதிகளுக்கான கட்டுமான திட்டத்தில் (PMAY-U) இதுவரை 20 சதவிகித வீடுகளின் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள வீடுகளின் கட்டுமான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ. ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், இதுவரை ரூ.34 ஆயிரம் கோடி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நவீன கட்டுமான முறைகள்
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கடந்த 2014–ம் ஆண்டு முதல் 2019, மே மாதம் முடிய நகர்ப்பகுதிகளில் கிட்டத்தட்ட 81 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், 61 சதவிகித வீடுகள் கட்டி முடித்து அவற்றில் பயனாளர்கள் குறியேறி இருப்பதாகவும், மீதமுள்ள 31 சதவிகித வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், கட்டுமான பணிகளில் பசுமை வழிமுறைகள், மாற்று தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நகர்ப்புற வீடுகளை தரமாகவும், விரைவாகவும் அமைக்கும்படி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் மாநிலங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story