குடியிருப்பு தேவையை நிறைவேற்றும் கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்கள்


குடியிருப்பு  தேவையை  நிறைவேற்றும்  கூட்டுறவு  வீட்டு  வசதிச் சங்கங்கள்
x
தினத்தந்தி 8 Nov 2019 11:00 PM GMT (Updated: 8 Nov 2019 12:48 PM GMT)

வீட்டு வசதி என்பது அனைவரின் அடிப்படைத் தேவை என்ற நிலையில், அதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

வீட்டு வசதி என்பது அனைவரின் அடிப்படைத் தேவை என்ற நிலையில், அதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் வீட்டு வசதி பெறும்போது, தரகு முறைகளாலும், வணிக ரீதியாகவும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இது குறித்து அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 

தமிழக அளவில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் வீட்டு வசதி தேவைகளை பூர்த்தி செய்து வரும் சுய சார்புடைய நிறுவனங்களாக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, தமிழக அளவில் 700–க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் உள்ளன.

அவற்றில் 509 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் நகர்ப்புற மக்கள் வீட்டு வசதி தேவைகளையும், 166 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் கிராமப்புற மக்கள் வீட்டு வசதித் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பிரதான நோக்கம், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவு மக்களின் வீட்டு வசதி தேவைகளை நிறைவேற்றுவதாகும்.

முக்கிய நோக்கங்கள்

நிதி நிறுவனங்கள் மூலம் நிதி வசதி பெற இயலாத மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஏற்கத்தக்க வட்டி விகிதத்தில் வீட்டு வசதி சங்கங்கள் கடன் வழங்குகின்றன. நிலங்களைக் கொள்முதல் செய்து, அனைத்து வசதிகளும் கொண்டதாக மனைப் பிரிவுகளை மேம்படுத்தி அதனை உறுப்பினர்களுக்கு வாங்கத்தக்க விலையில் அளிக்கப்படுகிறது. தனியார் மேம்பாட்டாளர்களை ஒப்பிடும்போது சங்கங்கள் குறைந்த லாபத்திலும், மனை ஒதுக்கீட்டாளர்கள் பயன்பெறும் வகையிலும் விற்பனை செய்து வருகிறது.

எதிர்காலத் திட்டங்கள்

கடன்கள் வழங்குவதைக் கண்காணிக்கவும், விரைவாக கடன்கள் வழங்குவதற்காகவும் ஒற்றைச் சாளர முறை (Single window system) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சங்கங்களுக்கு சொந்தமாக உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்படும். கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் மூலம் குறைந்த வருவாய் பிரிவினர்களுக்காக நகராட்சி மற்றும் பெருநகரங்களை ஒட்டியுள்ள இடங்களில் நிலங்களை கண்டறிந்து மனைப்பிரிவுகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story