டோனியின் அறிவுரை குறித்து தவறாக எதுவும் சொல்லவில்லை - குல்தீப் யாதவ் மறுப்பு


டோனியின் அறிவுரை குறித்து தவறாக எதுவும் சொல்லவில்லை - குல்தீப் யாதவ் மறுப்பு
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 9:50 PM GMT)

டோனியின் அறிவுரை குறித்து நான் தவறாக எதுவும் சொல்லவில்லை என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் மும்பையில் நடந்த கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ‘டோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது. அவர் சொல்வது போல் பந்து வீசி நல்ல பலன் கிடைக்கவில்லை என்றாலும் அது குறித்து அவரிடம் கேட்க முடியாது. டோனி வீரர்கள் யாருடனும் அதிகமாக பேசமாட்டார். ஓவர்களுக்கு இடையில் மட்டுமே தேவைப்பட்டால் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவார்’ என்று பேசியதாக செய்தி வெளியானது. இதற்கு சமூக வலைதளங்கள் மூலம் பலரும் குல்தீப் யாதவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டோனி குறித்து நான் சொன்னதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று குல்தீப் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பதிவில் ‘எந்தவித காரணமும் இல்லாமல் வதந்தியை விரும்பும் மீடியாக்கள் புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த சர்ச்சையை சிலர் வேகமாக பரப்பி வருகிறார்கள். அந்த செய்தி முற்றிலும் தவறானது. நான் யார் குறித்தும் எந்தவிதமான பொருத்தமற்ற கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து குல்தீப் யாதவ் அளித்த ஒரு பேட்டியில், டோனி சீனியர் வீரர். அவரது அறிவுரை எனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த அணிக்கும் விலைமதிக்க முடியாதது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவது எங்களது பணியை எளிதாக்குகிறது. இந்த உண்மையை யாரும் மாற்ற முடியாது. இதுபோன்ற வதந்திகளை பரப்புவது யார்? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் இது குறித்து எந்தவித பேட்டியும் கொடுக்காத நிலையில் இதுபோன்ற தவறான கருத்துகள் எப்படி வருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story