முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)


முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)
x
தினத்தந்தி 19 May 2019 11:53 PM GMT (Updated: 19 May 2019 11:53 PM GMT)

1992ம் ஆண்டு உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது.


5-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து முதல்முறையாக நடத்தின. இது தான் வண்ணமயமாக ஜொலித்த உலக கோப்பையாகும். சில புதுமைகள் இந்த உலக கோப்பையில் புகுத்தப்பட்டன. வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற சீருடையில் இருந்து பெயர் பொறிக்கப்பட்ட கலர்புல் உடைக்கு மாறினர். முதல்முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. மின்னொளியின் கீழ் பகல்-இரவு ஆட்டங்கள் முதல்முறையாக அரங்கேறின. விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்ய முதல் 15 ஓவர்களில் குறிப்பிட்ட வட்டத்திற்கு வெளியே 2 பீல்டர் மட்டுமே நிற்கும் விதியும் அறிமுகம் ஆனது. இது பேட்டிங்கில் அதிரடி சூரர்கள் உருவாக வழிவகுத்தது.

இந்த உலக கோப்பையில் முதலில் 8 அணிகள் தான் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இனவெறி கொள்கையால் தென்ஆப்பிரிக்கா மீது விதிக்கப்பட்டிருந்த 21 ஆண்டு கால தடை நீக்கப்பட்டதால் அந்த அணி முதல்முறையாக உலக கோப்பையில் சேர்க்கப்பட்டது. இதனால் அணிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இதன் அடிப்படையில் போட்டி அட்டவணை மாற்றப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.

முகமது அசாருதீன் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் பரம எதிரி பாகிஸ்தானை வீழ்த்தியது ஆறுதலான விஷயமாகும். உலக கோப்பையில் பாகிஸ்தானை முதல்முறையாக எதிர்கொண்ட இந்திய அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்தது. தனது முதலாவது உலக கோப்பையில் கால்பதித்த சச்சின் தெண்டுல்கர் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 48.1 ஓவர்களில் 173 ரன்னில் அடங்கியது. இந்தியாவுக்கு மற்றொரு வெற்றி ஜிம்பாப்வேக்கு எதிராக கிடைத்தது.

இந்த உலக கோப்பையில் பங்கேற்ற அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு வெற்றியை பெற்றிருந்தன. சிறிய அணியான ஜிம்பாப்வே லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் அதை கொண்டு 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் தோற்ற பிறகு அதில் இருந்து மீள முடியாமல் போய் விட்டது. 4 வெற்றி, 4 தோல்வி என்று 8 புள்ளியுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டு அரைஇறுதி வாய்ப்பை இழந்தது.

அதே நேரத்தில், தனது முதல் 5 ஆட்டங்களில் 3-ல் தோற்று இருந்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் எழுச்சி பெற்று 4-வது அணியாக (4 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 9 புள்ளி) அரைஇறுதிக்குள் நுழைந்தது. நியூசிலாந்து (7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளி), இங்கிலாந்து (11 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (10 புள்ளி) அரைஇறுதிக்கு வந்த மற்ற அணிகளாகும்.

முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. கேப்டன் மார்ட்டின் குரோவின் (91 ரன்) அரைசதத்தின் உதவியுடன் நியூசிலாந்து நிர்ணயித்த 263 ரன்கள் இலக்கை பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. இன்ஜமாம் உல்-ஹக் 37 பந்துகளில் 60 ரன்கள் விளாசி மிரள வைத்தார். தசைப்பிடிப்பால் கேப்டன் மார்ட்டின் குரோவ் 2-வது இன்னிங்சில் ஆடவில்லை. இது நியூசிலாந்துக்கு பின்னடைவாக அமைந்தது. மற்றொரு அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வெளியேற்றி 3-வது முறையாக இறுதி சுற்றை எட்டியது.

இறுதிப்போட்டி, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் நடந்தது. மகுடத்துக்காக பாகிஸ்தானும், இங்கிலாந்தும் வரிந்து கட்டின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. கேப்டன் இம்ரான் கான் 72 ரன்கள் எடுத்தார். முன்னதாக அவருக்கு 9 ரன்னில் கிரஹாம் கூச் கேட்ச்சை நழுவ விட்டார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ‘ஸ்விங்’ பந்து வீச்சில் பிரமிக்க வைத்த வாசிம் அக்ரம் 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். இதன் மூலம் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலக கோப்பையை கையில் ஏந்தியது. இத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் இதற்கு முன்பு பாகிஸ்தான் மக்களை இவ்வளவு மகிழ்ச்சியுடன் பார்த்ததில்லை என்று பெருமிதத்துடன் கூறினார். மொத்தம் 456 ரன்கள் குவித்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் தொடர்நாயகன் விருதை பெற்றார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் வாசிம் அக்ரம் (18 விக்கெட்) முதலிடம் பிடித்தார்.

சர்ச்சையை கிளப்பிய ‘மழை விதி’

இந்த உலக கோப்பையில் மழை விதி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இலக்கை நோக்கி ஆடும் போது மழை குறுக்கிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பை சரிகட்ட ஓவர் குறைக்கப்பட்டு இலக்கு மாற்றி அமைக்கப்படும். ஆனால் இந்த விதி 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருப்பதாக புகார் கிளம்பியதால் இந்த உலக கோப்பையில் புதிய மழை விதி அமல்படுத்தப்பட்டது. கடைசியில் அதுவும் சலசலப்பை உருவாக்கியது.

இரண்டாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் சிட்னியில் சந்தித்தன. 45 ஓவராக குறைத்து நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட போது மழை குறுக்கிட்டது. அப்போது அந்த அணியின் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. 12 நிமிடங்கள் இழப்பு ஏற்பட்டதால் மழை விதி கொண்டு வரப்பட்டு ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டு மெகா போர்டில் காண்பிக்கப்பட்டது. இதை கண்டு கொதித்து போன ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். தென்ஆப்பிரிக்க வீரர்களும் செய்வதறியாது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

புதிய மழை விதிப்படி முதல் இன்னிங்சில் எந்த ஓவர்களில் குறைந்த ரன்கள் எடுக்கப்பட்டதோ அதன் விகிதாச்சாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மழையால் 2 ஓவர்கள் குறைக்க வேண்டி இருந்ததால் இங்கிலாந்தின் இன்னிங்சில் குறைந்த ரன் எடுக்கப்பட்ட இரு ஓவர்கள் ஆராயப்பட்டன. அதில் 2 ஓவர்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் மெய்டனாக்கி இருந்தனர். அதில் எக்ஸ்டிரா வகையில் மட்டும் ஒரு ரன் எடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் 2 ஓவர் குறைக்கப்பட்ட போது அந்த உதிரி ரன் மட்டுமே கழிக்கப்பட்டன. இறுதியில் ஒரு பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. வேறு வழியின்றி களம் கண்ட தென்ஆப்பிரிக்க வீரர்கள் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்து விட்டு கண்ணீரோடு வெளியேறினர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு மழை எமனாக வந்தது என்றால் அது தான் பாகிஸ்தானுக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுத்தது. அதாவது இங்கிலாந்துக்கு எதிரான லீக் சுற்றில் பாகிஸ்தான் அணி 40.2 ஓவர்களில் 74 ரன்னில் சுருண்டது. இதன் பின்னர் இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்த போது, மழை புகுந்து விளையாடியது. முடிவை அறிய குறைந்தது 15 ஓவர்கள் தேவையாகும். தொடர்ந்து மழை கொட்டியதால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த புள்ளி மட்டும் பாகிஸ்தானுக்கு கிடைத்திருக்காவிட்டால் ஆஸ்திரேலிய அணி அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கும். பாகிஸ்தான் நடையை கட்டியிருக்கும்.

இறுதியில் குழப்பமாக இருந்த இந்த விதிமுறை தூக்கி எறியப்பட்டது. இதன் பின்னர் தான் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை கொண்டு வரப்பட்டு இந்த நாள் வரை அது தொடருகிறது. அந்த சமயத்தில் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை இருந்திருந்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு ஒரு பந்தில் 5 ரன் தேவையாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story