தோனிக்காக வேண்டுமென்றே சுமாராக பந்து வீசினாரா, ஹர்திக்....? - சுனில் கவாஸ்கர் விமர்சனம்


தோனிக்காக வேண்டுமென்றே சுமாராக பந்து வீசினாரா, ஹர்திக்....? - சுனில் கவாஸ்கர் விமர்சனம்
x
தினத்தந்தி 15 April 2024 8:21 AM GMT (Updated: 15 April 2024 8:47 AM GMT)

ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் படுமோசமாக இருந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் சென்னை வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்களை குவித்தது.

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. மும்பை அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தான் முக்கிய காரணம் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ஏனெனில் சி.எஸ்.கே. பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் வீசினார். அந்த ஓவரில் சி.எஸ்.கே. அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 6, 6, 6, 2 என ஹாட்ரிக் சிக்சர்களுடன் 20 (4 பந்துகள்) ரன்கள் விளாசி அற்புதமான பினிஷிங் கொடுத்தார். கடைசியில் அந்த 20 ரன்கள் வித்தியாசத்தில்தான் மும்பை தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் மற்றும் பவுலிங் படுமோசமாக இருந்ததாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். அத்துடன் தம்முடைய முன்னாள் கேப்டனான தோனி சிக்சர்களை அடித்து ஹீரோவாகட்டும் என்ற வகையில் பாண்டியா வேண்டுமென்றே சுமாரான பந்துகளை வீசியதாகவும் விமர்சிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"இது நீண்ட காலத்திற்குப் பின் நான் பார்த்த மோசமான பந்து வீச்சாகும். அது பாண்ட்யா அவருடைய ஹீரோவின் அரவணைப்பை பெறுவதற்காக வேண்டுமென்றே பந்து வீசியதுபோல் தெரிந்தது. குறிப்பாக தோனி சிக்சர்கள் அடிக்கும் விதமான பந்துகளை அவர் வீசினார். ஒரு சிக்சர் பரவாயில்லை.

ஆனால் பேட்ஸ்மேன் (தோனி) லென்த் பந்திற்காக காத்திருக்கும்போது அடுத்த பந்தில் பாண்டியா அதையே வீசினார். அதேபோல தோனி மீண்டும் சிக்சர் அடிப்பதற்காக பார்த்துக்கொண்டிருந்தபோது பாண்ட்யா புல் டாஸ் பந்தை வீசினார். அந்த வகையில் இது மிகவும் சுமாரான பவுலிங் மற்றும் கேப்டன்ஷிப். என்னை கேட்டால் ருதுராஜ், ஷிவம் துபேவின் அதிரடிக்கு பின்பு சென்னை அணியை 185 - 190 ரன்களுக்குள் மும்பை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story