ஐ.பி.எல். மட்டும் இப்படி இருந்தால்.. தோனி- ரோகித்தை மிஞ்சியிருப்பார் விராட் கோலி - ரவி சாஸ்திரி கருத்து


ஐ.பி.எல்.  மட்டும் இப்படி இருந்தால்.. தோனி- ரோகித்தை மிஞ்சியிருப்பார் விராட் கோலி - ரவி சாஸ்திரி கருத்து
x
தினத்தந்தி 4 April 2024 10:50 AM GMT (Updated: 4 April 2024 1:18 PM GMT)

விராட் கோலி சிறப்பாக செயல்பட்டும் மற்ற வீரர்கள் சொதப்புவதால் பெங்களூரு அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்று ரவி சாஸ்திரி விமர்சித்துள்ளார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 10 அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நடப்பு சீசனை தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

குறிப்பாக இந்த சீசனில் பெரும்பாலான அணிகள் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறது. ஆனால் ஆர்.சி.பி. சொந்த மண்ணில் விளையாடிய கொல்கத்தா மற்றும் லக்னோவுக்கு எதிராக தோல்வியை பதிவு செய்துள்ளது.

இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் 182 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளிஸ்சிஸ், கேமரூன் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் பெங்களூரு அந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இருப்பினும் அந்த அணிக்கு வழக்கம்போல இந்த வருடமும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இதுவரை களமிறங்கிய 4 போட்டிகளில் 203 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடி வருகிறார். ஆனால் அதை அப்படியே பந்து வீச்சில் வள்ளலாக வாரி வழங்கும் ஆர்.சி.பி. பவுலர்கள் வெற்றியை எதிரணிக்கு பரிசளித்து வருகின்றனர். அதன் காரணமாக விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வெல்லும் அளவுக்கு அபாரமாக விளையாடியும் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் மட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்தால் இந்நேரம் எம்.எஸ். தோனி, ரோகித் சர்மா போன்றவர்களை மிஞ்சி விராட் கோலி அதிக கோப்பைகளை வென்றிருப்பார் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு விராட் கோலி சிறப்பாக செயல்பட்டும் மற்ற வீரர்கள் சொதப்புவதால் பெங்களூரு அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் பேசியபோது, "ஒருவேளை ஐ.பி.எல். தொடர் தனிநபர் விளையாட்டாக இருந்தால் விராட் கோலி எம்.எஸ். தோனி, ரோகித் சர்மா போன்றவர்களை மிஞ்சி அதிக கோப்பைகளை வென்றிருப்பார்" என்று கூறினார்.


Next Story