டெஸ்ட் கிரிக்கெட்டின் 133 ஆண்டுகால சாதனையை சமன் செய்ய அக்சர் படேலுக்கு வாய்ப்பு
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது.
பெங்களூரு,
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டி பகல்-இரவு போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) ஆகும். இந்த போட்டியில் 133 ஆண்டுகால மிகப்பெரிய சாதனையை சமன்செய்யும் வாய்ப்பு அக்சர் படேலுக்கு கிடைத்துள்ளது. அது டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை கடக்கும் வீரர் என்ற சாதனை ஆகும்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை ஆஸ்திரேலிய வீரர் சார்லஸ் டர்னர் புரிந்துள்ளார். அவர் கடந்த 1880 ஆம் ஆண்டு இச்சாதனையை படைத்தார். இந்த மைல்கல்லை அவர் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளிலேயே எட்டினார். அதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் உள்ளார். அவர் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல், தற்போதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் 36 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் அக்சருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அவர் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 14 விக்கெட்டுகளை எடுத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டின் 133 ஆண்டுகால சாதனையை சமன் செய்த பெருமை அவருக்கு கிடைக்கும். அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய திறமையான சுழற்பந்துவீச்சாளர்களுடன் சேர்ந்து 14 விக்கெட்டுகளை எடுப்பது அக்சருக்கு சவாலானதாக இருந்தாலும், மிகப்பெரும் சாதனையை சமன்செய்யும் வாய்ப்பும் அவரிடம் உள்ளது.
Related Tags :
Next Story