கடன் பாக்கிக்காக டைரக்டர் கே.பாலசந்தரின் வீடு ஏலத்துக்கு வருகிறதா?

கே.பாலசந்தரின் வீடு ஏலம் விடப்படுவதாக வந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று கவிதாலயா நிறுவனம் கூறியுள்ளது.

Update: 2018-02-13 23:45 GMT
கவிதாலயா பட நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கவிதாலயா நிறுவனத்தின் கடன் பாக்கிக்காக மறைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் வீடு மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கவிதாலயா, டி.வி.தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010-ல் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான வேறு சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கியது.

2015-ல் திரைப்படம் மற்றும் டி.வி.தொடர் தயாரிப்புகளை நிறுத்தி டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவு செய்தது. முதலும் வட்டியும் சேர்த்து கணிசமான தொகையையும் செலுத்தி விட்டது. மீதமுள்ள கடன் பாக்கியை செலுத்துவதற்கு வங்கியுடன் பேச்சு வார்த்தையை சட்டரீதியாக நடத்தி வருகிறது.

இந்த சமயத்தில் வங்கியின் விளம்பரத்தை பார்த்து சமூக ஊடகங்கள் வழியாக கே.பாலசந்தரின் வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வந்து விட்டது என்று உண்மைக்கு புறம்பான செய்தி பரவி விட்டது. எங்கள் மீது உண்மையான பாசமும் அன்பும் கொண்டு எங்களை தொடர்பு கொண்ட நல்லிதயங்கள் இந்த தவறான செய்தியால் கலக்கமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்