குழந்தைகள் தெய்வங்கள் - நெகிழ்கிறார் ஹேமமாலினி

பன்முகத் திறமை கொண்டவர் நடிகை ஹேமமாலினி. அவர் தனது குழந்தைகள் பற்றி நெகிழ்ச்சியாக கூறும் உண்மைகளும், அவரது உணர்வுகளும்..!

Update: 2018-02-25 06:21 GMT
ன்முகத் திறமை கொண்டவர் நடிகை ஹேமமாலினி. அவர் தனது குழந்தைகள் பற்றி நெகிழ்ச்சியாக கூறும் உண்மைகளும், அவரது உணர்வுகளும்..!

“பெண்ணாக இருக்கும் எனக்குள்ளே பல பரிமாணங்கள். நடிகை, நாட்டியக் கலைஞர், மனைவி, என் குழந்தைகளுக்கு அம்மா! இப்படி பலவற்றில் என்னை நான் ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் அம்மா பதவிதான் மிக பெரியது. மிகவும் உணர்வு பூர்வமான உறவும் அதுதான். அவர்களது சிரிப்பு, பேச்சு, விளையாட்டு போன்ற அனைத்துமே பெரும் மகிழ்ச்சிதரும். அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

எனக்கு முதலில் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை. அவருடைய ஆசீர்வாதத்தால் எனக்கு இரண்டும் பெண் குழந்தைகளாகப் பிறந்தன. முதலில் ஈஷா பிறந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் முழு உலகமும் அவளைச் சுற்றியே இருந்தது. நான் ஒரு பிரபல நடிகை என்பதை கடந்து ஒரு அம்மா என்பதிலேயே மனம் பெருமிதம் கொண்டது.

அவளுடைய ஒவ்வொரு செயலும் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. மழலை மொழி, குறும்புச் செயல்கள் எல்லாம் என்னை அவள் வசப்படுத்தியது. அப்போது வெளியுலகில் இருந்து என்னை நானே கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டேன். முழு நேரமும் அவளுடனேயே கழிந்தது. அவளைப் பிரிந்து ஒரு கணமும் வாழ முடியாது என்ற நிலையில் ஒரு நாள்.. அவள் பள்ளிக்கு போனாள். அந்த நிமிடங்களை நினைத்தால் எனக்கு இப்போதும் சிரிப்பு வருகிறது. அவளை பிரியப் போகிறோமே என்ற நினைப்பு என்னை பதற்றத்தில் ஆழ்த்தியது. சின்ன குழந்தைப் போல தேம்பித் தேம்பி அழுதேன்.

என் மகள் புதிய சூழ்நிலைக்கு செல்லப்போகிறாள். அவளுக்கு அங்கே எல்லாம் புதுமையாக இருக்கும். அங்கே நான் இருக்கப் போவதில்லை. அவள் என்னைத் தேடுவாள் என்ற நினைப்பு என்னுள் பாரமாக இறங்கியபோது கண்கள் நீரில் நனைந்தது. அந்த உணர்வு பூர்வமான நிமிடங்களை என்னால் மறக்க முடியவில்லை. ‘இதுக்கே இப்படியா.. நீ அவளுக்கு கல்யாணம் செய்து மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கும்போது என்ன நடக்கப்போகிறதோ’ என்று என் கணவர் கேலி செய்தார். ஆமாம் அவளுக்கு கல்யாணமும் நடக்கும் அல்லவா, என்று நினைத்தபோது அழுகை மேலும் அதிகரித்தது. மனம் இயல்புநிலைக்குத் திரும்ப வெகு நேரம் ஆனது. அறிவு சொல்லும் விஷயங்களை மனம் கேட்பதில்லை. அதனால் ஏற்படும் அவஸ்தைதான் அதுவென்று புரிந்துகொண்டேன்.

ஈஷா பள்ளியில் இருந்து திரும்பியதும், என்னை பிரிந்து பள்ளிக்கு சென்ற ஏக்கம் அவள் முகத்தில் படர்ந்திருப்பதைப் பார்த்தேன். என் மனம் பாரமானது. அவளுடைய சிறிய அசவுகரியத்தைக் கூட என்னால் தாங்க முடியாது. அவள் என்னை பிரிந்துச் செல்வதில் ஆயிரம் நியாயங்கள் இருந்தாலும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் தினமும் பள்ளியில் இருந்து திரும்பும் வரை மனம் அமைதியின்றித் தவித்தது. அவள் வீடு திரும்பியதும் தான் எனக்கு நிம்மதி தோன்றும். ஓடிப்போய் அவளை அணைத்துக் கொள்வேன். அது ஒரு புது அனுபவம். காலப்போக்கில் சூழலுக்கு ஏற்ப பழகிக்கொண்டேன்.

குழந்தைகள் நமக்கு வாழ கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அதையெல்லாம் மீறி நாம் வாழ்ந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகள் தான் நமக்குத் தருகிறது. உண்மையான அன்பிற்கு நாம் எல்லோரும் அடிமைகள் தான். குழந்தைகள் நம் ஒவ்வொருவர் வாழ்க்கை யிலும் உன்னதமானவர்கள். குழந்தைகளுக்காக நாம் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராவோம். ஆனால் எதற்காகவும் குழந்தைகளை விட்டுக்கொடுக்க முன்வர மாட்டோம். குழந்தைகளை பார்க்கும்போது மனதில் துளிர்விடும் தன்னம்பிக்கை, நமக்கு எதையும் சாதிக்கும் சக்தியைக் கொடுக்கும்.

நான் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பிறகு தான் என் அம்மாவைப் பற்றி நிறைய யோசித்தேன். வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் என்னை உயர்த்த அவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள் இப்போது நினைவிற்கு வருகிறது. என் தொழில், எதிர்காலம், திருமண வாழ்க்கை அனைத்தைப் பற்றியும் நிறைய யோசித்தார். காரணம் என் வாழ்க்கையின் மேல் அவருக்கு இருந்த அக்கறை. என்னைத் திட்டுவது, கண்டிப்பது, அறிவுரை கூறுவது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக அவருடைய அன்புதான் இருக்கும். தாய்க்கும்-குழந்தை களுக்குமான உறவு தெய்வீகமானது. ஏன் என்றால் அதில் சுயநலம் இல்லை” என்கிறார், ஹேமமாலினி.

மேலும் செய்திகள்