சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் ஆந்திராவில் மீட்பு

சினிமா பைனான்சியர் போத்ராவின் மகளை சென்னைக்கு அழைத்து வந்து போலீஸ் விசாரணை நடத்தினர்.

Update: 2018-03-07 22:45 GMT
சென்னை,

காணாமல் போன சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா நேற்று ஆந்திராவில் மீட்கப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை தியாகராயநகரில் வசித்து வரும் பிரபல சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கந்து வட்டி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் சட்டமும் அவர் மீது பாய்ந்தது. அதே வழக்கில் அவரது 2 மகன்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தன் தந்தையின் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது மகள் கரிஷ்மா போத்ரா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த முகுந்த்சந்த் போத்ரா, தொடர்ந்து பைனான்ஸ் தொழிலை கவனித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி தியாகராயநகர் போலீஸ் துணை கமிஷனரை சந்தித்த அவர், “தனது மகள் கரிஷ்மா போத்ராவை (வயது 30) கடந்த 2 நாட்களாக காணவில்லை. அவர் கடத்தப்பட்டிருக்கிறார்” என்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். காணாமல்போன கரிஷ்மா போத்ராவுக்கு திருமணம் நடைபெறவில்லை என்பதால், காதல் விவகாரம் ஏதாவது இருக்குமோ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், ஆந்திரா மாநிலம் குண்டூரில் நேற்று கரிஷ்மா போத்ரா மீட்கப்பட்டார். தந்தை திட்டியதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

நேற்று இரவில் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட கரிஷ்மா போத்ராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், பெண்கள் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்ட அவர், இன்று (வியாழக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

மேலும் செய்திகள்