ஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் அதிர்ச்சியில் நடிகர்-நடிகைகள்

தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்குகளால் தத்தளிக்கிறது.

Update: 2018-03-11 23:15 GMT

தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்குகளால் தத்தளிக்கிறது. 2 வருடங்களாக திரைப்பட சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் சினிமா தொழில் அடியோடு பாதித்து உள்ளது. சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி பெரிய சவாலாக வந்தது. எதிர்ப்புகளால் ரூ.100-க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதம் என்று அதை குறைத்தனர்.

30 சதவீத கேளிக்கை வரியும் திரையுலகை அழுத்தியது. இதற்காக தியேட்டர்களை 4 நாட்கள் மூடினர். பிறகு அந்த வரியை 8 சதவீதமாக குறைத்தனர். பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கால் 13 நாட்கள் படப்பிடிப்புகள் பாதித்தன. தற்போது தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் குதிப்பதால் பட உலகம் முற்றிலுமாக முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

படங்களை திரையிட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்று அறிவித்து உள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவா இயக்கத்தில் அஜித்குமார்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு வருகிற 23-ந் தேதி தொடங்க இருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம், கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம், விஷால் நடிக்கும் சண்டகோழி-2, தனுஷ் நடிக்கும் வடசென்னை, மாரி-2, சிவகார்த்திகேயனின் சீமராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

இந்த படப்பிடிப்புகள் 16-ந் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன. படப்பிடிப்புகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் நடிகர்-நடிகைகள் அதிர்ச்சியில் உள்ளனர். பெப்சி தொழிலாளர்களும் வேலை இழக்கும் வருத்தத்தில் உள்ளனர்.

விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதால் தீபாவளிக்கு அவற்றை கொண்டு வர முடியுமா? என்று படக்குழுவினர் தவிப்பில் உள்ளனர். தியேட்டர் அதிபர்கள் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16-ந் தேதி முதல் திரையரங்குகளை மூடுகிறார்கள். ஸ்டிரைக்கால் திரையுலகம் முடங்கும் நிலைமை ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்