30 படப்பிடிப்புகள் நிறுத்தம், 1,000 தியேட்டர்கள் மூடப்பட்டன ஸ்டிரைக்கால் திரையுலகம் முடங்கியது

சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நேற்று முதல் மூடப்பட்டன.

Update: 2018-03-17 00:00 GMT
பட அதிபர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தங்களில் குதித்துள்ளதால் திரையுலகம் முடங்கி உள்ளது. ஏற்கனவே திருட்டு வி.சி.டி, ஜி.எஸ்.டி. பிரச்சினை, பெப்சி தொழிலாளர்கள்-பட அதிபர்கள் மோதல் என்று சர்ச்சைகளை சந்தித்த பட உலகம் இப்போது மீண்டும் போராட்ட களத்துக்குள் வந்துள்ளது.

தியேட்டர்களில் புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பட அதிபர்கள் கடந்த 1-ந் தேதி முதல் 16 நாட்களாக புதிய படங்களை திரைக்கு கொண்டுவராமல் வேலை நிறுத்தம் செய்கின்றனர். நேற்று முதல் சினிமா படப் பிடிப்புகளையும் நிறுத்திவிட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்து வந்த 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. நடிகர்-நடிகைகள், பெப்சி தொழிலாளர்கள் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் நடக்கும் படப்பிடிப்புகளை 23-ந் தேதியில் இருந்து நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தையும், சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விசுவாசம் படத்தையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இரண்டு படங்களின் பட வேலைகளும் முடங்குவதால் திட்டமிட்டபடி தீபாவளிக்கு கொண்டுவர முடியுமா? என்று படக்குழுவினர் குழம்புகிறார்கள்.

கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன்-2 படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் அதிக பொருட்செலவில் அரங்கு அமைத்துள்ளனர். விரைவில் அங்கு படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால் பட அதிபர்கள் ஸ்டிரைக்கினால் படப் பிடிப்பு நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தியேட்டர் அதிபர்கள் கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நேற்று முதல் மூடி உள்ளனர். இதனால் தினமும் டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், கேன்டீன் மூலம் வரவேண்டிய ரூ.10 கோடி நஷ்டம் ஏற்படுவதாக தியேட்டர் அதிபர் ஒருவர் கூறினார். 

மேலும் செய்திகள்