உதயநிதிக்கு, ‘மக்கள் அன்பன்’ பட்டம் டைரக்டர் சீனுராமசாமி வழங்கினார்

டைரக்டர் சீனுராமசாமி ‘மக்கள் அன்பன்’ பட்டத்தை உதயநிதிக்கு வழங்கினார்.

Update: 2018-03-31 23:30 GMT
தேசிய விருது பெற்ற ‘தென்மேற்கு பருவ காற்று’ படத்தை டைரக்டு செய்தவர், சீனுராமசாமி. ‘கூடல் நகர்,’ ‘நீர்ப்பறவை,’ தர்மதுரை’ ஆகிய படங்களையும் இவர் டைரக்டு செய்து இருக்கிறார். தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதியை, ‘தென்மேற்கு பருவ காற்று’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர், இவர்தான்.

தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து, ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை டைரக்டு செய்தார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து, ‘தர்மதுரை’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் வெற்றிகரமாக ஓடியது.

தொடர் வெற்றிகளை பெற்று வரும் விஜய் சேதுபதிக்கு, ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தை சீனுராமசாமி வழங்கினார். அந்த பட்டத்தை விஜய் சேதுபதி தனது படங்களில் பயன்படுத்தி வருகிறார். ஒவ்வொரு படத்தின் டைட்டிலிலும், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி என்று போடப்படுகிறது.

இந்த நிலையில் சீனுராமசாமி, உதயநிதி ஸ்டாலினை வைத்து, ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தை டைரக்டு செய்து வந்தார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், ‘கண்ணே கலைமானே’ படம் இறுதிக்கட்ட வேலைகளுக்காக காத்திருக்கிறது. படப்பிடிப்பின்போது உதயநிதியின் யதார்த்தமான நடிப்பை பார்த்து அசந்து போன டைரக்டர் சீனுராமசாமி, ‘மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தை உதயநிதிக்கு வழங்கினார். அதை உதயநிதி பெருமையுடன் பெற்றுக்கொண்டார்.

உதயநிதி, ஒரு தயாரிப்பாளராக திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, ‘குருவி,’ ‘ஆதவன்,’ ‘மன்மத அம்பு’ போன்ற படங்களை தயாரித்தார். ‘ஆதவன்’ படத்தில், கவுரவ நடிகராக திரையில் தோன்றினார். அதன்பிறகு, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் கதாநாயகன் ஆனார். தொடர்ந்து, ‘இது கதிர்வேலன் காதல்,’ ‘நண்பேன்டா,’ ‘கெத்து,’ ‘மனிதன்,’ ‘சரவணன் இருக்க பயமேன்,’ ‘பொதுவாக என் மனசு தங்கம்,’ ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களை தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ளார்.

தொடர்ந்து கதாநாயகனாக பல படங்களில் உதயநிதி  நடித்துக்கொண்டிருக்கிறார். இனிமேல் அவர் நடிக்கும் பட ‘டைட்டில்’களில், ‘மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தை பார்க்கலாம்! 

மேலும் செய்திகள்