கர்நாடகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு சிக்கல்

கர்நாடகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-04-02 23:30 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களை கர்நாடகத்தில் வெளியிட எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் பட அதிபர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ரஜினிகாந்தின் ‘காலா’ பட வேலைகள் முடிந்து இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக கியூமா குரேஷி நடித்துள்ளார். பா.ரஞ்சித் டைரக்டு செய்துள்ளார். மும்பை தாதா கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார்.

ரஜினிகாந்தின் இன்னொரு படமான 2.0 படத்துக்கு கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் தள்ளிவைக்கப்பட்டு அதற்கு பதிலாக காலாவை முன்கூட்டி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுபோல் கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படமும் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்துக்கு சமீபத்தில் தணிக்கை முடிந்து ‘யூஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

பட அதிபர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் ஆனதும் இரண்டு படங்களும் திரைக்கு வர உள்ளன. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுத்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் கண்டனம் தெரிவித்து உள்ளார். “காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடகத்துக்கு எதிராக பேசி வருகின்றனர். எனவே அவர்களின் படங்களை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம்” என்று அவர் கூறி உள்ளார்.

வாட்டாள் நாகராஜ் மிரட்டல் காரணமாக காலா, விஸ்வரூபம்-2 படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு வசூல் பார்க்கிறார்கள். கர்நாடகாவில் இந்த படங்களை திரையிடாவிட்டால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இரண்டு படங்களும் திரைக்கு வரும்போது கர்நாடக வினியோகஸ்தர்கள் மூலம் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டு கர்நாடக போலீசாரிடம் மனு அளிக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்