விஜய்-அஜித் படங்கள் ரீ-ரிலீஸ் போட்டி: யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை - 'பில்லா' பட இயக்குநர்

ரஜினி நடித்த ’பில்லா’ படத்தை ரீமேக் செய்வது என்பது சவாலான விஷயம் என்றும் விஜய்-அஜித் பட ரீ ரிலீஸ் போட்டியில் யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் ‘பில்லா’ பட இயக்குநர் விஷ்ணு வர்தன் கூறியுள்ளார்.

Update: 2024-04-30 11:28 GMT

விஜய் நடித்த 'கில்லி' படம் ரீ-ரிலீஸிலும் வசூலில் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் நாளை நடிகர் அஜித் பிறந்தநாளையொட்டி 'பில்லா' படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. அஜித் vs விஜய் என இப்போதே ரசிகர்கள் இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி வரும் நிலையில், ரீ-ரிலீஸில் வசூலில் யார் மிஞ்சப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

நடிகர் அஜித் பிறந்தநாளை ஒட்டி அவர் நடித்த 'பில்லா' படம் நாளை ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படத்திற்கு முன்பே நடிகர் விஜய் நடித்த 'கில்லி' படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆனதை ஒட்டி கடந்த ஏப்ரல் 20ம் தேதி படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ. 12 கோடிக்கும் அதிக வசூலை அள்ளி, படம் மாஸ் காட்டியது. 

தமிழகம் மட்டுமல்லாது பிரான்ஸ், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களின் கொண்டாட்டமாக மாறியது. இந்நிலையில், அஜித்தின் 'பில்லா' ரீ-ரிலீஸ் ஆவது அஜித் vs விஜய் என்ற போட்டியாக ரசிகர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.

மேலும், 'கில்லி' ரீ-ரிலீஸ் வசூலை 'பில்லா' முறியடிக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில், 'பில்லா' படம் பற்றி இயக்குநர் விஷ்ணு வர்தன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில், "ரஜினி சார் நடித்த 'பில்லா' படத்தை ரீமேக் செய்வது என்பது சவாலான விஷயம் தான். 'பில்லா'வை ரீமேக் செய்வதற்கு முன்பு பலமுறை நான் போட்டுப் பார்த்தேன். அப்போது ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகி இப்போது மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

அந்தப் படத்தில் அஜித் சார் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். நயன்தாராவிடம் எப்போதுமே ரசிக்கும்படியான ஒரு ஆட்டிட்யூட் இருக்கும். அதுதான் நான் அவரைத் தேர்ந்தெடுக்கக் காரணம். அஜித், விஜய் படங்கள் அடுத்தடுத்து ரீ-ரிலீஸ் என்பதால் யார் முந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருப்பது இயல்புதான். ஆனால், அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மற்றபடி, படம் ரீ-ரிலீஸ் ஆவதே மகிழ்ச்சி தான். அதில் யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை" என்று கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்