தணிக்கையில் காலா படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கமா?

தணிக்கையில் காலா படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டதா என படக்குழுவினர் விளக்கம்.

Update: 2018-04-03 23:30 GMT
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பட அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த படத்துக்கு தடையில்லா சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சான்றிதழ் இருந்தால்தான் படம் தணிக்கை செய்யப்படும். ‘ஸ்டிரைக்’ காரணமாக தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய படங்களுக்கு தடையில்லா சான்று அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் திரைப்பட வர்த்தக சபையிடம் இருந்து அந்த சான்றிதழை படக்குழுவினர் வாங்கியதாக கூறப்பட்டது. தற்போது ‘காலா’ படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து சர்ச்சையான சில காட்சிகளை நீக்கி விட்டு படத்துக்கு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியதாக கூறப்பட்டது. இதனை எதிர்த்து படக்குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பி இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் வெளியானது.

இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். தணிக்கைக்கு விண்ணப்பித்து சான்றிதழ் பெறுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும், மறு தணிக்கைக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர். காலா படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் அறிவித்து இருந்தார்.

ஆனால் பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. காலா படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். கதாநாயகியாக கியூமா குரேஷி நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் ரஜினிகாந்த் திருநெல்வேலி தமிழ் பேசி நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்