தமிழில் கதை பஞ்சமா? பிறமொழி படங்களில் கவனம் செலுத்தும் நடிகர்-நடிகைகள்

நடிகர்-நடிகைகள் பிறமொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.

Update: 2018-04-19 23:30 GMT

அண்மைக்காலங்களில் தமிழ் சினிமாவில் புதிய கருவோ, வித்தியாச கதைகளோ தென்படவில்லை. பிரபல இயக்குனர்களே கதைப்பஞ்சத்தில் தவிப்பதாக கூறுப்படுகிறது. எனவே முன்னணி கதாநாயகர்கள் பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் ‘ரீமேக்’கில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படம் நானி நடித்த ‘பலே பலே மஹாடேத வோய்’ படத்தின் தழுவல். விஷால் இரும்புத்திரை, சண்டக்கோழி-2 படங்களை தொடர்ந்து நடிக்கவிருக்கும் ‘டெம்பர்’ படம் தெலுங்கில் அதே பெயரில் வெளியான படத்தின் தழுவல். ஜீவா மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சுவாதந்தர்யம் அர்த்த ராத்தியில’ என்ற படத்தின் தமிழ் பதிப்பில் நடிக்க இருக்கிறார்.

தனுஷ் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நீடி நாடி ஒகே கதா’ என்ற படத்தின் தழுவலில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ் ‘கட்டப்பனையில் ரித்திக் ரோஷன்’ என்ற மலையாள படத்தை தமிழில் தயாரிக்க இருக்கிறார். மனிதன், நிமிர் என்று இரண்டு பிறமொழி தழுவல் படங்களில் நடித்த உதயநிதி அடுத்து ‘ஹேப்பி வெட்டிங்’ என்ற மலையாள படத்தின் ‘ரீமேக்’கில் நடிக்கவுள்ளார்.

பெல்லி சூப்புலு தெலுங்கு படத்தின் தமிழ் தழுவலில் விஷ்ணு விஷால், தமன்னாவை நடிக்கவைக்க முயற்சி நடக்கிறது. துல்கர், பார்வதி நடிப்பில் மலையாளத்தில் வெளியான சார்லி படத்தின் ‘ரீமேக்’கில் நடிக்கவிருக்கிறார் மாதவன். இந்த படத்தை விஜய் இயக்குகிறார். மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படம் தமிழில் அரவிந்த்சாமி, அமலாபால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தயாராகிறது.

‘100 பர்சன்ட் லவ்’ தெலுங்கு படம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தமிழில் 100 பர்சன்ட் காதல் என்று படமாகி வருகிறது. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடிக்கிறார். முன்னணி கதாநாயகிகளும் பிறமொழி தழுவல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘யு டர்ன்’ கன்னட படத்தின் தமிழ், தெலுங்கு தழுவலில் சமந்தா, குயின் இந்தி படத்தின் தமிழ் தழுவலில் காஜல் அகர்வால், ‘பரி’ இந்தி படத்தின் தமிழ் தழுவலில் அனுஷ்கா ஷர்மா வேடத்தில் நயன்தாரா, ‘தும்ஹாரி சுலு’ என்ற இந்தி படத்தின் ‘ரீமேக்’கில் ஜோதிகா, ‘என் எச் 10’ இந்தி பட ‘ரீமேக்கில் திரிஷா என்று பட்டியல் நீள்கிறது.

ஒரு காலத்தில் தமிழில் இருந்து தான் அதிக அளவில் படங்கள் இந்தி, தெலுங்கு என்று பிறமொழிகளுக்கு சென்றன. ஆனால் இப்போது அந்த நிலை மாறி தமிழ் சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டு தமிழ் சினிமாக்காரர்கள் மற்ற மொழி படங்களை தமிழில் இயக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழில் இருக்கும் நல்ல எழுத்தாளர்களை பயன்படுத்தினால் இங்கும் வித்தியாசமான படங்கள் உருவாகும் என்று கதாசிரியர் ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்