சினிமா செய்திகள்
“தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும்” -நடிகை அமலாபால்

தலைகீழாக நிற்கும் யோகாசனம் உடலுக்கு வலிமை தரும் என நடிகை அமலாபால் கூறினார்.

தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ரட்சகன் படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடிக்கும் அமலாபால் சமீப காலமாக யோகாசன பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விசேஷ பயிற்சியாளரை வைத்து யோகாசனம் கற்கிறார். ஒரு மரத்தின் அருகில் தலைகீழாக நின்று சிரசாசனம் செய்யும் படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அமலாபால் கூறியிருப்பதாவது:-

“கஷ்டமான வேலைகளை செய்யும்போது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்று சொல்ல கேட்டு இருக்கிறோம். தலைகீழாக நிற்பது உடலுக்கு எவ்வளவு முக்கியமானது, பயன் அளிக்க கூடியது என்பதை இப்போது உணர்ந்து இருக்கிறேன். யோகாவில் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் போடுவது மிகவும் கஷ்டமானது.

எல்லோராலும் எளிதாக அதை செய்ய முடியாது. கடும் பயிற்சிகள் மூலம் மட்டுமே செய்ய முடியும். இந்த ஆசனத்தை நான் ரொம்ப நாட்களாக கற்றேன். இதற்காக பயிற்சியாளர் வைத்து இருந்தேன். முதலில் சுவரை தாங்கலாக வைத்து தலைகீழாக நின்றேன். நான் செல்லும் இடமெல்லாம் யோகா பயிற்சி செய்யும் பாயையும் எடுத்துச் சென்றேன். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் தலைகீழாக நின்று பயிற்சி எடுத்தேன்.

இப்போது எனக்கு யாருடைய உதவியும் இல்லாமல் தலைகீழாக நின்று சிரசாசனம் போட முடிகிறது. இந்த ஆசனம் உடம்பை வலுவாக்கும். எல்லோரும் அவசியம் இதை செய்ய வேண்டும்.” இவ்வாறு அமலாபால் கூறினார்.