சினிமா செய்திகள்
கேரள முதல்வரை பாராட்டிய நடிகர் சூர்யா

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடந்த 6-ந் தேதி நீட் தேர்வு எழுத சென்ற மாணவ-மாணவிகளுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவின் பேரில் மாநில அரசு உதவிகள் செய்து கொடுத்தது. நீட் தேர்வு நடக்கும் பகுதிகளுக்கு சிறப்பு பஸ் வசதிகள் செய்து கொடுத்தனர். ரெயில், பஸ் நிலையங்களில் தமிழ் தெரிந்த தன்னார்வ தொண்டு அமைப்பினரையும் நிறுத்தி இருந்தனர்.

எர்ணாகுளத்தில் தேர்வு எழுதிய மணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி இறந்ததும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லவும் கேரள அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதற்காக முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்தார்.

திருவனந்தபுரத்தில் நடந்த மலையாள நட்சத்திர கலை விழாவில் கலந்து கொண்ட சூர்யா அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, “நீட் தேர்வு எழுத வந்த தமிழக மாணவர்களுக்கு கேரள மக்கள் தாயுள்ளத்துடன் உதவிகள் செய்து கொடுத்ததை பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்கள் மன உளைச்சல் இல்லாமல் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்த முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், கேரள அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.