சினிமா செய்திகள்
அடித்தால் ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு: சல்மான்கானுக்கு கூடுதல் பாதுகாப்பு

அடித்தால் ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு எதிரொலியாக சல்மான்கானுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சல்மான்கான் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். மான்வேட்டை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கிறார். ‘லவ் ராத்திரி’ என்ற பெயரில் புதிதாக தயாரித்துள்ள படம் விவகாரத்திலும் இப்போது எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார். இந்த படத்தில் சல்மான்கான் சகோதரியின் கணவர் ஆயுஷ் சர்மா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக வாரினா உசைன் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து அக்டோபர் 5-ந்தேதி நவராத்திரி பண்டிகையொட்டி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். ஆனால் படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஆக்ராவில் லவ்ராத்திரி பட போஸ்டரை விஷ்வ இந்து அமைப்பினர் எரித்தனர். சல்மான்கானை அடித்தால் ரூ.2 லட்சம் பரிசு தரப்படும் என்று ஹிந்து ஹி ஆகே என்ற அமைப்பு அறிவித்து உள்ளது. அந்த அமைப்பின் ஆக்ரா பிரிவு தலைவர் கோவிந்த பராஷர்தான் கூறும்போது, “சல்மான்கான் நடவடிக்கைகள் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே அவரை தாக்குபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு தரப்படும்” என்றார். இதனால் இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சல்மான்கான் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. சல்மான்கான் செல்லும் இடங்களில் போலீசாரும் பாதுகாப்பு அளிக்கிறார்கள். இந்த நிலையில் சல்மான்கான் நடித்துள்ள ‘ரேஸ்-3’ படத்தை வருகிற 15-ந்தேதி திரைக்கு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சல்மான்கான் சுற்றிலும் பாதுகாவலர்களை வைத்துக்கொண்டு கலந்து கொள்கிறார்.