சினிமா செய்திகள்
சினிமா கேள்வி பதில்! குருவியார்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
பள்ளிக்கூட ஆசிரியை வேடத்துக்கும், ஆஸ்பத்திரி நர்ஸ் வேடத்துக்கும் கச்சிதமாக பொருந்துகிற கதாநாயகி யார்? (டி.ஜேம்ஸ் சின்னதுரை)

நயன்தாரா! இவர் அளவுக்கு அந்த வேடங்கள் மற்ற கதாநாயகிகளுக்கு பொருந்தாது!

***


குருவியாரே, விஜய் சேதுபதி ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? அவருடைய படம் எத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகிறது? (எஸ்.சண்முகப்ரியன், தேனி)

விஜய் சேதுபதி, ரூ.8 கோடி சம்பளம் வாங்குகிறார். அவருடைய படம், ரூ.20 கோடிக்கு வியாபாரம் ஆகிறதாம்!

***

குருவியாரே, டைரக்டர் பிரபு சாலமோன் ஒரு இந்தி படத்தை இயக்கப் போவதாக சொன்னாரே... அந்த திட்டம் என்ன ஆனது? (எம்.அகமது பாட்ஷா, புதுச்சேரி)

டைரக்டர் பிரபு சாலமோன் இந்தி படத்தை இயக்கி, முதல்கட்ட படப்பிடிப்பையும் முடித்து விட்டார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அந்த படத்துக்கு, ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்று பழைய இந்தி படத்தின் பெயரை சூட்டியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் கதாநாயகனாக ராணா நடிக்கிறார்

***

கவர்ச்சி தாரகை நமீதாவுக்கும், குடும்பப்பாங்கான தேவயானிக்கும் என்ன ஒற்றுமை? (வி.புவனேஸ்வரி, பூந்தமல்லி)

இருவருமே வட இந்திய தயாரிப்புகள். இரண்டு பேரும் ஒரே காலகட்டத்தில் திரையுலகுக்கு அறிமுகமானார்கள்!

***

குருவியாரே, ரஜினிகாந்த் நடிக்க, கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்ய இருக்கும் படம் எப்போது தொடங்கும்? இந்த படத்தில் ரஜினிகாந்த் தோற்றம் மாறுகிறதா, இல்லையா? (ஏ.வினோத், சென்னை-4)

கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடங்கியது. இந்த படத்துக்காக ரஜினிகாந்த் தோற்றம் மாறுகிறது. அவர் நடுத்தர வயதுடையவராக நடிக்கிறார். அவருடைய வெண் தாடி, கருப்பு நிறத்துக்கு மாறியிருக்கிறது!

***

கவிஞர் பா.விஜய் டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்து வந்த ‘ஆருத்ரா,’ என்ன மாதிரியான படம்? கதாநாயகி யார்? படம் எந்த நிலையில் உள்ளது? (கே.கவின் ஸ்ரீதர், சேலம்)

‘ஆருத்ரா, சஸ்பென்ஸ்-திகில் கலந்த படம். இதில், கதாநாயகியாக நடித்திருப்பவர், சாய் தன்சிகா. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்!

***

குருவியாரே, பெங்களூரை சேர்ந்த வித்யாசாகரை மணந்து கொண்ட மீனா, இப்போது வசிப்பது சென்னையிலா, பெங்களூருவிலா? (ஆர்.கோமதிநாயகம், கடையநல்லூர்)

மீனா, கணவர்-குழந்தையுடன் பெங்களூருவில் வசிக்கிறார். அவருடைய அம்மா சென்னையில் வசிக்கிறார். அம்மாவை பார்க்க மீனா அடிக்கடி சென்னைக்கு பறந்து வருகிறார். சில நாட்கள் சென்னையில் தங்கியிருந்து விட்டு, பெங்களூருவுக்கு திரும்புகிறார்!

***

‘பருத்தி வீரன்’ புகழ் பிரியாமணி தமிழ் பட உலகை ஒரேயடியாக மறந்து விட்டாரே...? (வி.ஜெயசேகரன், திருச்சி)

இதுபற்றி பிரியாமணியிடம் கேட்டதற்கு, “நான் அறிமுகமான தமிழ் பட உலகை ஒருபோதும் மறக்க மாட்டேன். எனக்கு பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், தமிழ் படங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன்” என்கிறார்!

***

குருவியாரே, நடிகை சங்கவியை எங்கே காணோம்? அவரை திரையில் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டதே? (பி.சவுந்தரராஜன், கொடைக்கானல்)

கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சங்கவி இப்போது, அடுத்த கட்டத்துக்கு (அக்காள், அண்ணி வேடங்களுக்கு) மாறப்போகிறார். அந்த மாற்றத்துக்கு அவர் தயாராவதால், புதிய படங்களில் அவரை பார்க்க முடியவில்லை!

***

மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில், அரவிந்தசாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகிய 4 பேர் இருக்கிறார்கள். இவர்களில் கதாநாயகன் யார்? (சு.மாணிக்கம், வேலூர்)

யாரும் கதாநாயகன் கிடையாது. 4 பேருக்கும் சம வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்!

***

குருவியாரே, செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட நடிகை யார்? (பி.கே.விக்னேஷ், அறந்தாங்கி)

முன்பு, கவுதமி. (இவர் வீட்டில் 17 நாய்களை வளர்த்து வந்தார்.) இப்போது, திரிஷா. (இவர், 7 நாய்களை வளர்க்கிறார்!)

***

‘சாமி-2’ படத்தில் விக்ரம் எத்தனை வேடங்களில் நடித்து வருகிறார்? (எஸ்.ஸ்டீபன், வந்தவாசி)

அந்த படத்தில், விக்ரம் 2 வேடங்களில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, ‘ஈரமான ரோஜாவே’ படத்தில் கதாநாயகனாக நடித்த சிவா, இப்போது என்ன செய்கிறார்? (எஸ்.குயிலன்ராஜ், வியாசர்பாடி)

புது பட வாய்ப்புகள் வருமா? என்று இன்னமும் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்!

***

சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்த படங்களில், எந்த படத்தில்-எந்த வேடத்தில், அவருடைய நடிப்பு அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது? (பி.வி.கஜேந்திரன், மதுரை)

‘தர்மதுரை’ படத்தில், அவர் குடிபோதையில் விஜய் சேதுபதியிடம் வழிந்து, உளறிக்கொட்டும் காட்சி, மிக இயல்பாக இருந்தது. அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது!

***

குருவியாரே, விஷால், நடிகர் அர்ஜுனிடம் பணிபுரிந்தாராமே... என்னவாக பணியாற்றினார்? (வே.கவுதம், முகப்பேர்)

விஷால், அர்ஜுனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார்.

***

குருவியாரே, நயன்தாரா மிகவும் புத்திசாலி... சாமர்த்தியமானவர்... என்றெல்லாம் சொல்கிறார்களே... அவருடைய புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் எதில் தெரிகிறது? (ஜே.ராஜ் சுந்தர், திட்டக்குடி)

இளம் கதாநாயகர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதிலும், காதல்... கல்யாணம்... என்று அடிக்கடி செய்திகளை பரப்பி, அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதிலும் நயன்தாராவுக்கு ஈடு-இணை நயன்தாராதான்!

***

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ராதிகா ஆப்தே என்னவாக இருந்தார்? (ஜி.அரவிந்த் குமார், மயிலாடுதுறை)

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ராதிகா ஆப்தே, ‘மாடலிங்’காக இருந்தார்!

***