சினிமா செய்திகள்
நடிகர் பவன் கல்யாணை விவாகரத்து செய்த நடிகை ரேணுதேசாய் 2–வது திருமணம்?

தமிழில் பார்த்திபன், பிரபுதேவா இணைந்து நடித்த ‘ஜேம்ஸ்பாண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரேணுதேசாய். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
ரேணுதேசாய் இரண்டு படங்களை தயாரித்து இருக்கிறார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பவன் கல்யாண் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார்.

1996–ல் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான பவன் கல்யாண் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அரசியலில் குதித்து ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். பவன் கல்யாணும் ரேணுதேசாயும் 2009–ல் திருமணம் செய்து கொண்டனர்.

மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். 2013–ல் விவாகரத்தும் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். விவாகரத்துக்கு பிறகு சொந்த ஊரான புனே சென்று விட்டார். தற்போது ரேணுதேசாய் 2–வது திருமணத்துக்கு தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உறுதிபடுத்தி இருக்கிறார். ‘‘நான் தவறான  இடங்களில் அன்பை தேடினேன். இப்போது அன்பான காதலரை உண்மையான வார்த்தைகள், அர்த்தமுள்ள சைகைகள், நேர்மையான செயல்கள் மூலம் கண்டு பிடித்து விட்டேன்.’’ என்று கருத்து பதிவிட்டு ஒரு ஆணின் கையோடு கைகோர்த்துள்ள படத்தையும் வெளியிட்டுள்ளார். காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தெலுங்கு பட உலகில் பேசப்படுகிறது.