சினிமா செய்திகள்
குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியுமா? திலீப்புக்கு ரம்யா நம்பீசன் சவால்

நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி கைதான திலீப், தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முடியுமா? என ரம்யா நம்பீசன் திலீப்புக்கு சவால் விடுத்துள்ளார்.
நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி கைதானதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது. நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் மலையாள நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்கள். குற்றவாளிக்கு பாதுகாப்பாக சங்கம் செயல்படுகிறது என்று அவர்கள் கண்டித்தனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் பெண்கள் சினிமா கூட்டுகுழுவினரும் எதிர்த்தனர். மேலும் 14 நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகப்போவதாக மிரட்டினர். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கத்தை உடைத்து போட்டி சங்கம் உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. நடிகர் சங்கத்தின் செயற்குழு விரைவில் கூட இருப்பதாகவும் அப்போது திலீப்பை சேர்த்த முடிவை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் நடந்த திரைப்பட சங்கங்களின் பேரவை கூட்டத்தில் நடிகை ரம்யா நம்பீசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

“நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொறுப்பு சங்கத்துக்கு இருக்கிறது. ஆனால் அந்த கடமையை செய்ய தவறியதால் சங்கத்தில் இருந்து விலக வேண்டிய கடினமான முடிவை நான் எடுக்க நேர்ந்தது. எனது செயலை பிரபலமாக இருக்கும் பலர் பாராட்டினார்கள். எனக்கு ஆதரவும் தெரிவித்தனர். பொதுமக்களும் ஆதரவு தெரிவித்தார்கள். இது மகிழ்ச்சி அளித்தது. திலீப்புக்கு குற்ற செயலில் தொடர்பு இல்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். சில விஷயங்களில் எதிர்ப்பு தெரிவிப்பது தவிர்க்க முடியாதது.”

இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.