சினிமா செய்திகள்
‘‘ராகவா லாரன்சின் சவாலை ஏற்க தயார்’’ –நடிகை ஸ்ரீரெட்டி

நடிகர் லாரன்ஸ் சவாலை ஏற்பதாக நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகினர் மீது பாலியல் புகார் சொல்லி வரும் ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. நடிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என்றும் எனவே ஸ்ரீரெட்டி மீது விபசாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டைரக்டர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

பதிலுக்கு ஸ்ரீரெட்டியும் தன்னை விலைமாது என்று சொன்ன வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமி‌ஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் ராகவா லாரன்ஸ், நான் தவறு செய்யவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

ஐதராபாத்தில் படப்பிடிப்புக்கு வந்தபோது ஓட்டலுக்கு அழைத்து பட வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னுடன் தவறாக நடந்ததாக ராகவா லாரன்ஸ் மீது ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரெட்டி மீது பரிதாபம் ஏற்படுகிறது என்றும் நடிப்பு திறமையை அவர் நிரூபித்து காட்டினால் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்து இப்போதே சம்பள முன்பணம் கொடுப்பேன் என்றும் லாரன்ஸ் கூறினார். 

லாரன்ஸ் சவாலை ஏற்பதாக ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். நான் விசாரணைக்கு உட்கார்ந்தால் நீங்கள் நிச்சயம் தோற்றுப் போவீர்கள். நீங்கள் சரி என்றால் உங்கள் படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு திறமை இருக்கிறது’’ என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். அதோடு கவர்ச்சி வீடியோவையும் வெளியிட்டு எதிர்ப்பு கிளம்பியதும் நீக்கி விட்டார்.