சினிமா செய்திகள்
எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபு சாலமனின் ‘கும்கி-2’

‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகம், ‘கும்கி-2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
லிங்குசாமி தயாரிப்பில், பிரபு சாலமன் டைரக்‌ஷனில், 2012-ம் ஆண்டில் வெளிவந்த ‘கும்கி’ படத்தில், விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடித்து இருந்தார்கள். அந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, 6 வருடங்களுக்குப்பின் அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘கும்கி-2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இதில், மதியழகன் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். கதாநாயகி முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி, பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத் ஆகியோருடன் 3 குழந்தை நட்சத்திரங்களும், உன்னி கிருஷ்ணன் என்ற யானையும் நடிக்கிறது. சுகுமார், ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு மைசூர் அருகில் உள்ள சிவசமுத்திரம் அருவி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெறுகிறது. அங்குதான் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு நடைபெறும் தமிழ் படப்பிடிப்பு இதுதான்.

“இந்த படப்பிடிப்புக்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று, யானை. அது கிடைத்து விட்டது. மற்றொன்று, கதாநாயகி. இன்னும் கிடைக்கவில்லை.”