காதலன் தற்கொலையால் சர்ச்சை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை நிலானி பரபரப்பு புகார்

காதலன் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கிய நடிகை நிலானி, நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், பல பெண்களை ஏமாற்றியவர் காந்தி லலித்குமார் என பேட்டி அளித்தார்.

Update: 2018-09-18 22:37 GMT
சென்னை,

ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸ் சீருடை அணிந்து போலீசாருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு கைதானவர் டி.வி. நடிகை நிலானி. ஜாமீனில் வெளியே வந்த அவர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். நிலானி திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்பவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் அவர் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த காந்தி லலித்குமார் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் நடிகை நிலானி, தனது காதலன் திருமணம் செய்துகொள்ளும்படி தொல்லை கொடுப்பதாக புகார் கூறியிருந்தார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட காந்தி லலித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலைக்கு தூண்டியதாக நடிகை நிலானி மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், இதனால் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கதறி அழுதபடி ஆட்டோவில் வந்த நிலானி, போலீஸ் அதிகாரிகளிடம் தான் கைப்பட எழுதிய பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை அவர் 6-வது மாடிக்கு சென்று சந்தித்தார்.

அப்போது நிலானி, கண்ணீர்விட்டு கதறி அழுதபடி கூறியதாவது:-
நான் காந்தி லலித்குமாரை காதலித்து அவரோடு சுற்றியது உண்மை தான். ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஆனால் அவரது தவறான நடவடிக்கைகளால் பிரிந்து வந்துவிட்டேன். அவரோடு ஒன்றாக சுற்றிய காலத்தில், அவர் என்னோடு நெருக்கமாக செல்போனில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டார்.

அவற்றை ‘வாட்ஸ்-அப்’பில் வெளியிட்டு என்னை அவமானப்படுத்தினார். இதனால் அவரை விட்டு விலகி வந்துவிட்டேன். அவர் எனக்கு செலவு செய்யவில்லை. நான் தான் அவருக்கு செலவு செய்தேன். அவரோடு பேசாவிட்டாலோ, ஒன்றாக சுற்றாவிட்டாலோ தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவார். இவ்வாறு 8 முறை மிரட்டியுள்ளார்.

அவரது தொல்லை தாங்காமல் தான், நான் போலீசில் புகார் கொடுத்தேன். அவர் தற்கொலை செய்துகொள்வார் என்று நினைக்கவில்லை. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நான் காந்தி லலித்குமாரோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள், புகைப்படங்களை வெளியிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பெண் அதிகாரியிடம் நடிகை நிலானி முறையிட்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த அதிகாரி கூறினார்.

பெண் அதிகாரியின் அறையைவிட்டு வெளியே வந்த நடிகை நிலானி கமிஷனர் அலுவலகத்தின் 6-வது மாடியில் திடீரென மயங்கிவிழுந்தார். அங்கிருந்த பெண் போலீசார் நடிகை நிலானியின் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர். பின்னர் கண்ணீர்விட்டு கதறி அழுதபடி நடிகை நிலானி ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சென்ற நடிகை நிலானி, சென்னை வடபழனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காந்தி லலித்குமார் தான் என்னை பின்தொடர்ந்து சுற்றினார். கணவரை பிரிந்து வாழும் நான் பாதுகாப்பு கருதிதான் அவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். ஆனால், அவர் என்னை போல பல பெண்களிடம் பழகி ஏமாற்றியவர் என்பதை அவரது செல்போனில் உள்ள புகைப்படங்கள் மூலம் தெரிந்துகொண்டேன். அவர் எந்தெந்த பெண்களிடம் பழகி ஏமாற்றினார் என்பதை பட்டியலிட்டு அவரே கைப்பட என்னிடம் எழுதி கொடுத்துள்ளார்.

அதில் தனலட்சுமி என்ற பெண் தான் மிகவும் ஏமாற்றப்பட்டவர். அந்த பெண் காந்தி லலித்குமாரின் முன்னேற்றத்திற்காக பெரிய அளவில் பாடுபட்டார். மோட்டார் சைக்கிள் கூட வாங்கிக்கொடுத்துள்ளார். வலுக்கட்டாயமாக எனக்கு இரண்டு முறை தாலி கட்ட முயற்சித்தார். நான் அதை தடுத்துள்ளேன். இதற்கு என் குழந்தைகளே சாட்சி.

அவரது குடும்பத்தினர் அவன் நல்லவன் இல்லை, அவனோடு பழகாதே என்று என்னை எச்சரித்துள்ளனர். காந்தி லலித்குமாரின் மோசமான செயல்களால் தான் அவரது தாயார் தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2016-ம் ஆண்டிலேயே நான் அவரை பிரிந்து வந்துவிட்டேன். அதன்பிறகு அவர் என் வாழ்க்கையில் குறுக்கிடாமல் இருந்தார். நான் சமீபத்தில் கைதாகி சிறைக்கு சென்றபோது என்னுடைய பணத்தில் ஜாமீனில் வெளியே கொண்டுவர காந்தி லலித்குமார் ஏற்பாடு செய்தார்.

அப்போது மீண்டும் அவர் என்னோடு ஒட்ட ஆரம்பித்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட காயம் தான் பொதுவாழ்க்கையில் என்னை ஈடுபட வைத்தது. மனக்காயங்களில் இருந்து ஆறுதலை தேடிக்கொள்வதற்காகவே நான் பொது பிரச்சினைகள் பற்றி பேச ஆரம்பித்தேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு சாதாரண பெண்மணி. 2 குழந்தைகளோடு வாழ்க்கையை நடத்துவதற்கு நான் கடும் போராட்டம் நடத்தி வருகிறேன். இது தான் உண்மை. இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக நடிகை நிலானியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை நடிகை நிலானியின் காதலன் வெளியிட்டுள்ளார்.

காந்தி லலித்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பாக இணையதளங்களில் நடிகை நிலானியோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளார். அவை இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நிலானியும், காந்தி லலித்குமாரும் படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து ஒன்றில் ஒன்றாக பயணித்திருக்கிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் தான் வெளியாகியிருக்கிறது. காந்தி லலித்குமார் நிலானியின் நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. நிலானியின் காலில் மெட்டி அணிவித்து, முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்போது காந்தி லலித்குமார், நிலானியை கட்டிப்பிடித்தபடி காதல் ரசம் சொட்டும் வகையில் உருக்கமாக பேசுகிறார். “நீ என் உசுரு, என் குலசாமி, உன்னை மட்டும் தான் எனக்கு பிடிக்கும், ஒருபோதும் நாம் பிரியக்கூடாது. நீ கண்ட கனவு கலையக்கூடாது.” என்றும், “நான் என் செல்லத்துக்கு மெட்டி போட்டுவிட்டேன். அதை மனப்பூர்வமாக ஏத்துக்கிட்ட அவ, என் பொண்டாட்டிதான். உலகத்திலே யாருக்குமே நிலானி மாதிரி பொண்டாட்டி அமையாது. என் தங்கம், என் ராசாத்தி” என்று காந்தி லலித்குமார் கண்ணீரோடு காதலையும் கலந்து பேசுகிறார். அடுத்தடுத்து முத்தமழையும் பொழிகிறார்.

காந்தி லலித்குமார் பேசும்போது, நிலானியை திருமணம் செய்துகொண்டது போலவும், திருமண நாள் அன்று தான் இருவரும் ஒன்றாக இருந்து காலில் மெட்டியை அணிவித்துவிட்டது போலவும் வீடியோ காட்சியில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நடிகை நிலானி, காந்தி லலித்குமாரை காதலிக்க மட்டுமே செய்தேன். திருமணம் செய்துகொள்ளவில்லை என்று போலீசாரிடம் கூறியிருக்கிறார். காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விஷயத்தில் போலீசார் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

தன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்காகத்தான் நடிகை நிலானி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர்விட்டு கதறி அழுது மயங்கி விழுந்து புகார் மனுவை கொடுத்துவிட்டு சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்